
வெளிமாநில தொழிலாளர்களை ராகுல் காந்தி சந்தித்ததாக வெளியான படத்தில் உள்ளவர் உண்மையில் வெளிமாநில தொழிலாளர் இல்லை… ஷூட்டிங் முடிந்து அவர் காரில் புறப்பட்ட போது எடுத்த படம் என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த புகைப்படமும் அவர் சந்தித்த தொழிலாளர்கள் காரில் புறப்பட்டு சென்ற படமும் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெளிமாநில தொழிலாளர் என்ற பெயரில் ராகுல் சந்தித்த பெண் ஷூட்டிங் முடிந்தவுடன் தனது காரில் புறப்பட்டு சென்றார்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, Sathish Thangasaravanan என்பவர் 2020 மே 20ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராகுல் காந்தி புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்தது சிலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்டியை தூக்கிக்கொண்டு செல்லலாமே என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று கூறப்படுபவர்கள் நடிகர் என்றும் இந்த சந்திப்பு ஒரு செட்அப் என்ற வகையில் இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று யாருமே இல்லை என்று கூற நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. ராகுல்காந்தி சந்தித்தபோது அங்கு ஏராளமான பத்திரிகையாளர்கள் இருந்தனர். உண்மையில் அது ஒரு ஷூட்டிங் போல இருந்தால், அப்போதே செய்தி வெளியாகி இருக்கும்.
புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பலரும் ராகுல் காந்தியை விமர்சித்து இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு வருவதைக் காண முடிந்தது.
இவற்றுக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், “சாலையில் நடந்து சென்ற தொழிலாளர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அவர்களின் கஷ்டங்களைக் கேட்டறிந்தார். அவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் கூகுளில் தேடியபோது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் ஒன்று கிடைத்தது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லி சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.
கட்சி நிர்வாகிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான வாகன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். மோனு என்ற தொழிலாளி கூறுகையில், “நாங்கள் ஹரியானாவில் இருந்து வருகிறோம், ஜான்ஸிக்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்றார்” என குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொழிலாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடந்தது என்பதால், இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சௌதிரி ஏதேனும் தகவல் தெரிவித்துள்ளாரா என்று அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அதில், ராகுல் காந்தி தொழிலாளர்களை சந்தித்தது மற்றும் அவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது தொடர்பாக ஏ.என்.ஐ வெளியிட்ட செய்தியை ரீட்வீட் செய்திருந்தார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக எங்களுக்கு தெரியவந்தது. ராகுல்காந்தி வந்து அவர்களை சந்தித்தார். இது தொடர்பாக போலீசாரிடம் நாங்கள் பேசினோம். அவர்கள் இரண்டு இரண்டு பேராக செல்ல அனுமதிப்பதாக கூறினார்கள். எங்கள் தன்னார்வலர்கள் அவர்களை தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இரண்டு இரண்டு பேராக அவர்களை அனுப்பி வருகிறோம்” என்றார்.
மேலும், தனியார் தொலைக்காட்சிக்கு டெல்லி காங்கிரஸ் கட்சித் தலைவர் அளித்த பேட்டியையம் அவர் ரீட்வீட் செய்திருந்தார். அதில், தொழிலாளர்கள் காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
ராகுல்காந்தி வந்து சந்தித்த பிறகு, காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்ததாக, புலம்பெயர் தொழிலாளர்கள் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தனர். உண்மையில் இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்றார்களா என்பது கேள்விக் குறிதான். ஏனெனில், இவர்கள் சொந்த ஊர் செல்ல காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் ஏ.என்.ஐ வெளியிட்ட ட்வீட் நமக்கு கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராகுல் காந்தி சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் வாகனங்களை ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் ராகுல் காந்தி சந்தித்ததாக கூறப்படுபவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை, புலம்பெயர் தொழிலாளர் என்று ஷூட்டிங் நடந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Title:ராகுல் காந்தி சந்தித்தது புலம்பெயர் தொழிலாளர்கள் இல்லை என்று பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
