இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

கடந்த ஜூலை 10, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ கோயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்₹8/-. சர்ச், மசூதிக்கு,₹2.85. மதசார்பற்ற நாட்டிலே இந்த வேறுபடு ஏன்.??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட தகவல் சமீப நாட்களாக, பல்வேறு மொழிகளில் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த தகவல் பரவ முதன்மை காரணம், அகில பாரத இந்து மகா சபாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளர் அ.மதிவாணன் என்பவருக்கு ஆர்டிஐ கீழ் விளக்கம் கேட்டு முறையீடு செய்திருந்தார்.

இதன்பேரில், அவருக்கு பதில் தெரிவிக்கப்பட்டது. அதில், ‘’ மனுதாரரின் 20.11.2019 நாளிட்ட கடிதம் வாயிலாக தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் கீழ் கேட்கப்பட்ட தகவல்களுக்கு கீழ்கண்டவாறு பதில் வழங்கப்படுகிறது.

1. இந்து சமய அறநிலைய துறைக்குச் சொந்தமாக நேரடியாக இயங்கும் கோவில். 

2. இந்து சமய அறநிலைய துறையின் கண்காணிப்பு (supervisor) மட்டும் கீழ் உள்ள கோவில். 

3. இஸ்லாம் மார்க்கம் மசூதி பள்ளிவாசல் வழிபாட்டுத்தலம்.

4.கிறிஸ்தவ (church, தேவாலயம்) வழிபாட்டுத்தலம் என அனைத்து மத பொது வழிபாட்டுத்தலங்களுக்கும் 1 யூனிட் மின்கட்டண விவரம் 0 முதல் 120 யூனிட் வரை ரூ.2.85 பைசா , 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75 பைசா.

5.இந்து சமய அறநிலைய துறையின் கீழ் இல்லாத தனியார் கோவில் (வணிக ரீதியான மின் இணைப்பிற்கு) 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5.00, 100 யூனிட்க்கு மேல் ரூ.8.05 பைசா என்ற தகவல் அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,” எனக் கூறப்பட்டிருந்தது.

இதனை ஊடக விவாதம் ஒன்றில் தொடர்புபடுத்தி, கார்ட்டூனிஸ்ட் வர்மா என்பவரும், கிஷோர் கே ஸ்வாமி என்பவரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்து, தமிழ்நாடு மின்சார வாரியம், இந்து மதத்திற்கு பாரபட்சம் காட்டுவதாக, விமர்சித்திருந்தனர். 

Cartoonist Varma Twitter Link Archived Link 
Kishore K Swamy Facebook LinkArchived Link


இவர்கள் மின்சார வாரியத்தின் விளக்கத்தை தவறாக படித்து, அர்த்தம் புரிந்துகொண்டு, மற்ற சமூக வலைதள பயனாளர்களையும் குழப்பி வருகின்றனர்.

குறிப்பிட்ட, மின்சார வாரியத்தின் விளக்கத்தை நன்கு படித்துப் பார்த்தாலே விவரம் புரியும். அதாவது, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து மத பொது வழிபாட்டுத் தலங்கள், சர்ச் மற்றும் மசூதிகளுக்கு பொதுவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத மற்றும் தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இயங்கும் கோயில்கள் (சர்ச், மசூதி) எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு வணிக ரீதியான மின் கட்டணமே வசூலிக்கப்படும்

இதுபற்றி நாம் சேலம் நகர மின்பகிர்மான வட்டம், முதுநிலை பொறியாளர் (எஸ்.ஈ), திரு. மணிவண்ணன் ராமன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

அப்போது அவர், ‘’சமூக வலைதளங்களில் சிலர் வேண்டுமென்றே இத்தகைய அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். பொது வழிபாட்டுத் தலங்களுக்கு (எந்த மதமாக இருந்தாலும்) ஒரே விதமான கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் (வீடு, தோட்டம்) கோயில், மசூதி, சர்ச், ஈஷா யோகா மையம், நித்யனாந்தா பீடம் என எது கட்டினாலும் வணிக ரீதியான கட்டணம்தான் வசூலிக்கப்படும். ஏனெனில், அவர்கள் வணிக ரீதியான மின் இணைப்புதான் பெற்றிருப்பார்கள். அவை, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரைமுறைப்படுத்தாமல் இருக்கும். இவர்களுக்கான மின் கட்டணம் மாறுபடத்தான் செய்யும். அதனை புரிந்துகொள்ளாமல் இந்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகச் சிலர் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம்,’’ என தெரிவித்தார்.

இதுதவிர தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள மின் கட்டணம் நிர்ணய முறை பற்றி தெரிந்துகொள்ள, கீழே லிங்க் தரப்பட்டுள்ளது.

TNERC Tariff Plan Detail PDF Link

இந்த லிங்கில் நீங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தனியார் மின் இணைப்புகள் (வீடு மற்றும் வணிக ரீதியான) ஆகியவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மின் கட்டண விவரம், தரப்படும் மானியம் உள்ளிட்டவை பற்றி படித்து தெளிவு பெறலாம். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவரும் உண்மையின் விவரம்,

(1) மின்சார வாரியத்திடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஒருவர் விளக்கம் பெற்றுள்ளார். அந்த விளக்கத்தை அவர் பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். ஆனால், அதனை சரியாகப் படித்து அர்த்தம் புரிந்துகொள்ளாமல், ஒவ்வொருவரும் தவறான தகவலை பகிர்ந்து வருகின்றனர்.

(2) பொது வழிபாட்டுத் தலங்களுக்கு (எந்த மதமாக இருந்தாலும்) ஒரே மாதிரியான மின் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது.

(3) தனியார் இடத்தில் செயல்படக்கூடிய வழிபாட்டுத் தலங்கள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வராத வழிபாட்டுத் தலங்கள் என எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், அவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள மின் இணைப்பின் (வீடு அல்லது வணிக ரீதியான) அடிப்படையிலான கட்டணமே வசூலிக்கப்படும்.

(4) இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்கள் மற்றும் இதர மத வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து பொது வழிபாட்டுத் தலங்களுக்கும், 0 முதல் 120 யூனிட் வரை ரூ.2.85 என்ற அடிப்படையில்தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

(5) தனியார் இடத்தில் செயல்படும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் வணிக ரீதியான மின் இணைப்பே தரப்படுகிறது. அவர்களுக்கு 0 முதல் 100 யூனிட் வரை ரூ.5 எனவும், 100 யூனிட்டுக்கு மேல் சென்றால் ரூ.8.05 எனவும் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. वैसे! इस साइट पर https://www.thehindu.com/coupons/ आप लाभदायक छूट और कूपन प्राप्त कर सकते हैं!

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இதுபோல தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

Fact Check By: Pankaj Iyer 

Result: False