சனாதனம் பற்றி பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்க எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

டைம்ஸ் நவ் என்ற ஆங்கில ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், "CJI Initiates Suo-moto action against Udhayanidhi" என்று இருந்தது. நிலைத் தகவலில், "உதயநிதி பதவியிழக்க போவது உறுதி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Selva Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் சனாதனம் பற்றி தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக-வினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதே நேரத்தில் தான் பேசியது சரிதான், மன்னிப்பு கேட்க மாட்டேன், வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ளத் தயார் என்று உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் இதன் மீது நாம் இந்த கட்டுரையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழலில் டைம்ஸ் உதயநிதி ஸ்டாலின் மீது சூமோடோ எனப்படும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு நடவடிக்கையை தலைமை நீதிபதி மேற்கொண்டார் என்று செய்தி வெளியிட்டதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஏதும் செய்தி டைம்ஸ் நவ் இணையத்தில் வெளியிட்டதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது போல இல்லை. எனவே, வேறு வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, யூடியூப் தளத்தில் டைம்ஸ் நவ் வெளியிட்டிருந்த "மன்னிப்பு" அறிவிப்பு நமக்கு கிடைத்தது. அதில், "TIMES NOW YouTube had unintentionally put out a piece of false information that gave the wrong impression that the Chief Justice of India had taken suo Motu action against Udhayanidhi Stalin

The video has now been taken down. We deeply regret the error and apologize for the same" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: youtube.comI Archive

அதாவது, "இந்தியத் தலைமை நீதிபதி உதயநிதி ஸ்டாலின் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு நடவடிக்கை எடுத்தார் என்று தவறான செய்தியை எந்த வித உள்நோக்கமும் இன்றி எதிர்பாராத விதமாக வெளியிட்டுவிட்டது. அந்த வீடியோ தற்போது அகற்றப்பட்டுவிட்டது. நடந்த தவறுக்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

டைம்ஸ் நவ் ஊடகம் தவறான செய்தியை வெளியிட்டு அகற்றிவிட்டது. ஆனால் அதன் ஸ்கிரீன்ஷாட்டை அறிந்தோ, அறியாமலோ சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை நம்முடைய ஆய்வு உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சனாதனம் விவகாரம் தொடர்பாக உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது என்று பரவும் செய்தி தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததா?

Written By: Chendur Pandian

Result: False