நடிகர் விஜய் ரசிகர்கள் திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இவனுங்கள வச்சாடா ஆட்சியைப் பிடிக்க போற விஜய் தியேட்டரில் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் அடப்பாவிங்களா பத்தி இருந்தா கூண்டோட கைலாசம் போய் இருப்பீங்களேடா" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில், கொண்டாட்டம் எல்லை மீறிச் சென்று திரையரங்குக்குள்ளேயே பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாக சிலர் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ மற்றும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.


உண்மைப் பதிவைக் காண: Youtube

இந்த வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ காட்சியை 2023 நவம்பரில் ஊடகங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், "மகாராஷ்டிராவில் சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் வெளியான திரையரங்கம் ஒன்றுக்குள் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் 2023 நவம்பர் 14 அன்று வெளியிட்டிருந்த யூடியூப் வீடியோவில் "தியேட்டரில் பட்டாசு வெடித்து சல்மான் ரசிகர்கள் அலப்பறை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளும் நமக்குக் கிடைத்தன.


கோட் திரைப்படம் 2024 செப்டம்பரில் வெளியானது. ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவோ 2023 நவம்பரிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் இந்த சம்பவம் நடித்திருப்பதும் இதைச் செய்தது சல்மான்கான் ரசிகர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் திரையரங்கத்துக்குள் பட்டாசு வெடித்த விஜய் ரசிகர்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கோட் திரைப்படம் வெளியான திரையரங்கில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விஜய் ரசிகர்கள என்று பரவும் வீடியோ 2023ல் மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel