மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள்தான் பிரபல சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நடிகர் எம்.என்.நம்பியார் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் ஆகியோரின் புகைப்படங்கள் ஒன்று சேர்த்து நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், "எத்தனை பேருக்கு தெரியும். அகல்யா, செல்லமே போன்ற சீரியல்களில் நடித்த சினேகா தான் பிரபல நடிகர் நம்பியாரின் மகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள் ஸ்நேகா நம்பியார் என்று பிரபல சீரியல் நடிகையின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். என்.என்.நம்பியாருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் சுகுமாரன் நம்பியார் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றினார். அவரும் 2012ம் ஆண்டு தன்னுடைய 64வது வயதில் இறந்துவிட்டார். அப்படி இருக்கும் போது இவ்வளவு இளம் வயதில் அவருக்கு சகோதரி இருப்பாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல ஊடகங்களில் நம்பியாரின் குடும்பம் என்று முழு புகைப்படம் வெளியாகி இருந்தது. அதில் நம்பியாரின் இரண்டு மகன்களும் ஒரு மகளும் ஒன்றாக இருந்தனர். நம்பியாரின் பிள்ளைகள் மூவருக்கும் இடையே ஒரு சில ஆண்டுகள் வயது இடைவெளி இருக்கலாம். இதனால் நம்முடைய சந்தேகம் அதிகரித்தது.

சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியார் தொடர்பாக பதிவு ஏதும் கிடைக்கிறதா என்று கூகுளில் தேடினோம். அவரது ஃபேஸ்புக் பக்கம் நமக்கு கிடைத்தது. அதில், ஸ்நேகா ஈஷ்வர் நம்பியார் என்று இருந்தது. இதுவும் சந்தேகம் ஏற்படுத்தவே, ஸ்நேகாவை ஊடக நண்பர்கள் மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தோம். சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தொடர்பாகவும் அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது ஒரு வீடியோ இணைப்பை அவர்கள் நமக்கு கொடுத்தனர்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு ஸ்நேகா அளித்திருந்த பேட்டி அது. "ஊடகங்களுக்கு முதன் முறையாக இதன் மூலம் நாள் தெளிவுபடுத்துகிறேன்... இந்த வதந்தியுடன் சேர்த்துதான் சரத்பாபுவின் மனைவி என்றும் ஊடகங்களில் என் புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்பினார்கள்" என்று ஸ்நேகா கூறுகிறார். அவர் பேசும் போது, "என் அப்பாவின் பெயர் நம்பியார். நம்பியார் என்பது கண்ணூர் (கேரளா) பகுதியில் வாழும் ஒரு சிறிய சமூகம் ஆகும். நான் சென்னைக்கு வந்த போது, ஸ்நேகா என்ற பெயரில் பிரபலங்கள் இரண்டு மூன்று பேர் உள்ளார்கள்... அதனால் அப்பாவின் பெயரை சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அதனால் ஸ்நேகா என்ற என் பெயருடன் நம்பியாரை சேர்த்துக்கொண்டேன்.

ஆனால் ஏற்கனவே நம்பியார் சார் இருந்ததால், பலரும் என்னை நடிகர் நம்பியாரின் மகள் என்றே கருதினர். அவருடைய மகளின் பெயரும் ஸ்நேகா நம்பியார். ஆனால் அவர் என்னை விட வயதில் மூத்தவர். நான் எம்.என்.நம்பியாரின் மகள் இல்லை என்று பலரிடமும் தெளிவுபடுத்தியுள்ளேன். மீடியாவில் விளக்கம் அளிப்பது இது தான் முதன்முறை" என்றார்.

நம்முடைய தேடலில் எம்.என்.நம்பியாரின் பேரனும் உண்மையான ஸ்நேகா நம்பியாரின் மகனுமான தீபக் நம்பியாரின் பேட்டியும் நமக்குக் கிடைத்தது. அதில் வேறு ஒரு நடிகையின் படத்தை நம்பியாரின் மகள் என்று குறிப்பிட்டுப் பரவியதைப் பார்த்தீர்களா என்று பேட்டி எடுப்பவர் கேட்கிறார். அதற்கு அவர் அந்த தகவல் தவறானது என்று உறுதி செய்கிறார். மேலும் தன் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

இவை எல்லாம் சீரியல் நடிகை ஸ்நேகா நம்பியாரின் தந்தை மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நடிகர் எம்.என்.நம்பியாரின் மகள்தான் டிவி சீரியல்களில் நடித்து வரும் ஸ்நேகா நம்பியார் என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘நடிகர் நம்பியாரின் மகள்தான் டிவி நடிகை ஸ்நேகா’ என்று பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False