
அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று பா.ஜ.க வானதி ஶ்ரீனிவாசன் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
வானதி ஶ்ரீனிவாசன் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற வகையில் பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி ஶ்ரீனிவாசன் பேசுகிறார். நிலைத் தகவலில், “அதிமுக அடிமைகளுக்கு ஓட்டு போட வேண்டாம்..!! பாஜக வானதி ஆவேசம்..!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை News media Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 7 அன்று பதிவிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வானதி ஶ்ரீனிவாசன் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “எவ்வளவு பவர்ஃபுல் மந்திரியாக இருந்தாலும் அம்மா தூக்கிப்போட்டா சும்மா ஆகிடுவாங்க. வேட்பாளர்கள் பாவம் என்ன செய்வாங்க. இந்த மாதிரி அடிமைகளுக்கு எல்லாம் ஓட்டு போடாதீங்க” என்கிறார். இதில் எடிட் செய்யப்பட்டது இல்லை. அந்த வீடியோவிலேயே மிகச் சிறியதாக திருப்பூர் 09-04-14 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் முன்னேறியுள்ள இந்த காலகட்டத்தில் பழைய வீடியோக்களை எல்லாம் எடுத்துவந்து, இப்போது கூறியது போன்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் பதிவிடுவது தவறு இல்லை. ஆனால், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். முன்பு இப்படி பேசினார், இப்போது இப்படி மாறிவிட்டார் என்று கூறினால் கூட பரவாயில்லை.
தற்போது நிகழ்ந்தது போல, அதிமுக அடிமைகளுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறினார் என்று பதிவிடும்போது, அதை பலரும் ஷேர் செய்யும்போது அது பற்றி ஆய்வு செய்ய வேண்டி உள்ளது.
அசல் பதிவைக் காண: bbc.com I Archive
அந்த வீடியோவிலேயே 2014 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 2014 ஏப்ரல் என்பது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நேரம். லேடியா, மோடியா என்று ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்த நேரம். அந்த தேர்தலில் தமிழக மக்கள் 37 தொகுதிகளை அ.தி.மு.க-வுக்கு வழங்கினர்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாத நிலையில் வானதி பேசியது. 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதுதான் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உறுதியானது. அது தற்போது 2021 சட்ட மன்ற தேர்தலிலும் தொடர்கிறது.
இது குறித்து கருத்து அறிய பா.ஜ.க அகில இந்திய மகளிர் அணித் தலைவர் வானதி ஶ்ரீனிவாசனைத் தொடர்புகொண்டோம். ஆனால், நம்முடைய அழைப்பை அவர் ஏற்கவில்லை. தமிழக பா.ஜ.க ஊடகப் பிரிவு நிர்வாகியைத் தொடர்புகொண்டு பேசினோம். இந்த வீடியோவையும் அனுப்பினோம். இதை பார்த்த பிறகு அவர், ‘’பழைய வீடியோவை விஷமத்தனமாக பரப்பி வருகின்றனர். இதை வானதி ஶ்ரீனிவாசனின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம்,’’ என்றார்.
2014ம் ஆண்டு வானதி ஶ்ரீனிவாசன் பேசியதை தற்போது அவர் கூறியது போல பகிர்ந்து வருகின்றனர். இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மிஸ்லீடிங் செய்யும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.
முடிவு:
வானதி ஶ்ரீனிவாசன் 2014ல் பேசிய பேச்சை இப்போது பேசியது போல பரப்பி வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வானதி கூறியதாக பரவும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: Misleading
