நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எதிராக நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர் உதயநிதியை ரகசியமாக சந்தித்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு அரசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் சந்தித்த பழைய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "டம்மி அண்ணாமலைக்காக கோவையில் டம்மி வேட்பாளரை போடுவதற்காக பேக்கரி டீலிங் நடந்த போது 😏" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையும் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். தி.மு.க, அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் வலிமையான தலைவராக இருந்துவிடக் கூடாது என்று திமுக அமைச்சர் உதயநிதியை சந்தித்து ரகசிய பேச்சு வார்த்தை நடத்தினார் என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2022ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த புகைப்படத்துடன் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருப்பது தெரிந்தது.

தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில், "சென்னை வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேசின் தாயார் புஷ்பா நேற்று காலமானார். ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி கணேஷ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று மாலை வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி அங்கு வந்தார்.

அஞ்சலி செலுத்திய பின், இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது, கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து அண்ணாமலை கேட்டறிந்தார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive 1 I dinamalar.com I Archive 2

இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சந்தித்தார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2022ம் ஆண்டு வேறு ஒரு நிகழ்வில் உதயநிதி - அண்ணாமலை சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் தொடர்புபடுத்தி தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உதயநிதி - அண்ணாமலை ரகசிய சந்திப்பு என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False