
லாகூரில் குண்டு வெடித்தது என்று தந்தி டிவி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஆளாகி சாலை முழுக்க பொருட்கள், வாகனங்கள் சிதறி, எரிந்த நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது தந்தி டிவி. அதில், “லாகூரில் குண்டுவெடிப்பு – பரபரப்பு காட்சிகள். பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடக்கும் காட்சிகள் வெளியீடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நிலைத் தகவலில், “BREAKING || lahore | ஒரு இரவுக்கு தாங்குமா பாகிஸ்தான் – லாகூர் சிதறிய காட்சிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தி டிவி வெளியிட்டிருந்த செய்தியை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. பாகிஸ்தான் தரப்பில் இந்தியாவுக்குத்தான் பாதிப்பு என்பது போன்று செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்தியா மிகப்பெரிய தாக்குதல் நடத்தியது போலவும் இதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்றும் தந்தி டிவி வீடியோவுடன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்து பார்த்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்தியா தாக்குதலைத் தொடங்கியது 2025 மே மாதத்தில்… ஆனால், 2025 பிப்ரவரியில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதன் மூலம் இது இந்தியா நடத்திய தாக்குதலின் வீடியோ இல்லை என்பது உறுதியாகிறது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
இந்த வீடியோ தொடர்பாக தொடர்ந்து தேடினோம். அப்போது, கடந்த 2025 பிப்ரவரியில் அமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) என்ற நகரில் விமான விபத்து ஏற்பட்டது. நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய ரக விமானம் கீழே விழுந்ததில் விமானத்தில் பயணம் செய்த சிறு குழந்தை உள்பட 6 பேரும், தரையில் காரில் சென்று கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு என்று மே 8, 2025 அன்று தந்தி டிவி வெளியிட்டிருந்த வீடியோ 2025 பிப்ரவரியிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை உறுதி செய்துள்ளோம். இதன் மூலம் அமெரிக்காவின் விமான விபத்து வீடியோவை பாகிஸ்தான் குண்டு வெடிப்பு என்று தவறாகத் தந்தி டிவி பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
அமெரிக்காவில் 2025 பிப்ரவரி மாதம் ஏற்பட்ட விமான விபத்தின் வீடியோவை பாகிஸ்தானின் லாகூரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:லாகூரில் குண்டு வெடிப்பு என்று அமெரிக்க வீடியோவை வெளியிட்ட தந்தி டிவி!
Fact Check By: Chendur PandianResult: False
