
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலாவை வரவேற்க வேலூரில் குவிந்த மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
பிரம்மாண்ட மாநாடு போல பார்க்கும் இடம் எல்லாம் மனித தலைகளாக இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூரில் #_சின்னம்மா அவர்களை வரவேற்கக் காத்திருக்கும் தொண்டர்கள்….TN welcomes சின்னம்மா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Lakshmi என்பவர் 2021 பிப்ரவரி 8ம் தேதி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா கடந்த 2021 ஜனவரி இறுதியில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிப்ரவரி 8ம் தேதி அவர் சென்னை வந்தார். சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் பெங்களூரு தொடங்கி சென்னை வரை உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் 380 கி.மீ தூரத்தை அவர் 20 மணி நேரம் பயணித்து சென்னை வந்தார். அந்த அளவுக்கு வழி நெடுக அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், வேலூரில் சசிகலா வருகைக்காகக் காத்திருந்த தொண்டர்கள் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில்தடையை மீறி நடந்த விவசாயிகள் பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர் என்று பகிரப்பட்ட படத்தை, சசிகலா வருகையோடு தொடர்புப்படுத்திப் பதிவிட்டிருந்தனர். இது தவறான தகவல் என்று கமெண்டில் சிலர் கூறியிருந்தாலும், பதிவிட்டவர் அதை அகற்றுவதாக இல்லை.
பலரும் இதை ஷேர் செய்யவே, இந்த புகைப்படம் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையது என்பதற்கான நிரூபிக்க ஆதாரங்களைத் தேடினோம்.
படத்தை சற்று பெரிதுபடுத்திப் பார்த்தால் தலையில் ஆம் ஆத்மி கட்சியினர் அணிவது போன்ற அன்னா அசாரே தொப்பியுடன் சிலரும், சீக்கியர்கள், ஹரியானா விவசாயிகள் போல தலைப்பாகை அணிந்து சிலரும் இருப்பதைக் காண முடிந்தது. சிலர் கையில் தேசியக் கொடி வைத்திருப்பதையும் காண முடிகிறது.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பல ஊடகங்களும் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தன. சசிகலா 2021 பிப்ரவரி 8ம் தேதி தமிழகம் திரும்பினார். ஆனால், பிப்ரவரி 5ம் தேதியே இந்த புகைப்படத்தை விவசாயிகள் பஞ்சாயத்து என்று குறிப்பிட்டு முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது நமக்கு கிடைத்தது.
அசல் பதிவைக் காண: newindianexpress.com I Archive 1 I divya-bharat.com I Archive 2
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 2021 பிப்ரவரி 5ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில் உத்தரப்பிரதேசம் ஷாமலியில் நடந்த மஹா பஞ்சாயத்து என்று குறிப்பிட்டு இந்த படத்தைப் பகிர்ந்திருந்தனர்.
இது தவிர மேலும் பலர் இந்த புகைப்படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் விவசாயிகள் மஹா பஞ்சாயத்து என்று பதிவிட்டிருப்பதும் நமக்கு கிடைத்தது. இதன் மூலம் இந்த படம் சசிகலாவை வரவேற்க வேலூரில் கூடிய தொண்டர்கள் படம் இல்லை என்பது உறுதியாகிறது.
சசிகலா சென்னை திரும்பியது 2021 பிப்ரவரி 8ம் தேதி. ஆனால், அவரை வரவேற்க கூடிய மக்கள் என்று பகிரப்பட்டுள்ள படம் பிப்ரவரி 5ம் தேதியில் இருந்து செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் உத்தரப்பிரதேசம் ஷாமலியில் நடந்த விவசாயிகள் மஹா பஞ்சாயத்தின் போது எடுக்கப்பட்டது என்று முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், அ.தி.மு.க முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவை வரவேற்க வேலூரில் காத்திருந்த தொண்டர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சசிகலாவை வரவேற்க வேலூரில் காத்திருந்த தொண்டர்கள் என்று பகிரப்படும் படம் உத்தரப்பிரதேசத்தில் நடந்த விவசாயிகள் மஹா பஞ்சாயத்தின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சசிகலாவை வரவேற்க வேலூரில் கூடிய தொண்டர்கள் என்று பகிரப்படும் உத்தரப்பிரதேச புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
