நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சிறுவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

டெல்லி நிர்பயா வழக்கில் சிறுவன் என்பதால் மூன்று ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர் இவர்தான் என்று ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

குற்றவாளி ஒருவனை போலீசார் அழைத்துச் செல்லும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி நிர்பயா(ஓடும் பேருந்தில்) கற்பழிப்பு வழக்கு நினைவிருக்கிறதா..?அதில் ஒரு குற்றவாளிதான் இவன். வயது குறைந்த காரணத்தால் நிர்பயா வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது..

இவன் பெயர் முஹம்மது அஃப்ரோஸ்.. |

இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்யக்கூடிய அவன், நமது நாட்டின் வளைந்துகொடுக்கக்கூடிய சட்ட அமைப்பால் “வயது இல்லை” என்ற அடிப்படையில் சிறார் குற்றவாளியாக அறிவித்து, சிறார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டான். சிறார் சட்டத்தின்படி, அவனுக்கு 3 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சௌகரியமாகத் தங்குவது போல் முடித்துக் கொண்டு ராஜாவைப் போல் வெளியே இறங்கினான்..

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், இந்த மிருகம் தண்டனை முடிந்து வெளியே வந்து டெல்லியில் இருந்து இடம் மாறியது. இப்போது தென்னிந்தியாவில் எங்கோ ஒரு ஹோட்டலில் வேறு பெயரிலும், தெரியாத முகவரியிலும் சமையல்காரராக வாழ்ந்து வருகிறார் என்பது தெரிந்தது..

இப்போது அவருடன் இருப்பவர்களுக்கோ அல்லது அவர் வேலை பார்க்கும் ஹோட்டல் உரிமையாளருக்கோ கூட அவரது உண்மைக் கதை தெரியாது..!

தென்னிந்தியா என்று சொல்லும் போதே சில தேசிய ஊடகங்கள் சந்தேகம் எழுப்புகின்றன.. இவர் இப்போது நம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடுத்த பலியைத் தேடிக் கொண்டிருப்பார்..

கவனமாக இருங்கள்.. இந்தப் புகைப்படத்தில் இருப்பவன் உங்களைச் சுற்றி எங்காவது இருக்கக்கூட வாய்ப்புள்ளது.

இவனின் இந்த புகைப்படம் மற்றும் தகவல்களை முடிந்தவரை பகிரவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் 2012 டிசம்பர் 29ம் தேதி உயிரிழந்தார். நாட்டின் தலைநகரில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் ஆறு பேர் ஈடுபட்டதாகக் காவல் துறை தெரிவிக்கிறது. குற்றவாளிகளில் ஒருவரான ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் சிறார் சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஒருவர் சிறார் என்பதால் அதிகபட்சமாக அவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்ட அந்த நபர் 2015ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். சிறுவன் என்பதால் சிறார் சட்டத்தின் அடிப்படையில் அவன் பெயரைக் கூட அரசு வெளியிடவில்லை. மேலும் அவன் புகைப்படமும் வெளியாகவில்லை.

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive 1 I theweek.in I Archive 2

உண்மை இப்படி இருக்கையில், ஆறாவது நபருக்கு பெயர் வைத்து, அவர் இஸ்லாமியர் என்று குறிப்பிட்டு அவர் தமிழ்நாடு அல்லது கேரளாவில் இருப்பதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் அந்த ஆறாவது நபரா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த புகைப்படத்தில் இருப்பது குற்றவாளிகளுள் ஒருவரும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவருமான வினய் ஷர்மா என்று குறிப்பிட்டுப் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது. 

அந்த ஆறாவது நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். சிறார் சட்டம் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நபர், குற்றவாளி சிறுவன் அல்லது சிறுமி என்றால் அவர்கள் பற்றிய விவரத்தை வெளியிடக் கூடாது என்பதன் அடிப்படையில் 6வது நபர் பற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை என்று தெரிந்தது. அந்த சிறுவன் பற்றி தி வீக் இதழில் வெளியான கட்டுரை நமக்குக் கிடைத்தது. அதில் அந்த சிறுவன் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவன் என்றும் குடும்ப ஏழ்மை காரணமாக இளம் வயதிலேயே வேலைக்கு டெல்லிக்கு வந்துவிட்டான் என்றும் கூறப்பட்டிருந்தது. அதிலும் அவன் பெயர், இப்போது எங்கிருக்கிறான் என்று எந்த தகவலையும் வெளியிடவில்லை.

உண்மைப் பதிவைக் காண: bbc.com I Archive

நம்முடைய ஆய்வில் நிர்பயா வழக்கில் சிறுவன் என்பதால் விடுதலை செய்யப்பட்டவனின் புகைப்படம் என்று பரவும் படம் அந்த வழக்கில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வினய் ஷர்மா என்பவனின் புகைப்படம் அது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 6வது நபர் பற்றி எந்த விவரமும் பொதுவெளியில் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறந்து போன நபரின் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்த நபர் தமிழ்நாடு அல்லது கேரளாவில் ஏதாவது ஹோட்டலில் வேலை செய்யலாம் என்றும் இந்த நபர் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யத் தயாராக உள்ளார் என்றும் வதந்தி பரப்பியிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நிர்பயா வழக்கில் சிறுவன் என்பதால் விடுவிக்கப்பட்ட நபர் என்று பரவும் புகைப்படம் இந்த வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வினய் என்பருடையது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சிறுவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading