சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன் என்பவர் சிக்கியதாக சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி நியூஸ் கார்டு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மறைந்த நடராஜன் புகைப்படத்துடன் நியூஸ் ஜெ தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “வெளிச்சத்துக்கு வந்த சார்கள் சிக்குவார்களா? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு உதவியதாக திமுக நிர்வாகி சண்முகம் மற்றும் விளம்பர பிரியர் அமைச்சர் பெயர் அடிபட்ட நிலையில் அந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் பல்கலை. மக்கள் தொடர்பு அதிகாரி நடராஜன். சண்முகம், ஞானசேகர் மட்டுமில்லாமல் திமுகவில் பலருடன் நடராஜன் நெருக்கம் எனக் கூறப்படும் நிலையில் வழக்கில் தொடர்புடைய உண்மை சார்கள் சிக்குவார்களா என மக்கள் எதிர்பார்ப்பு” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சசிகலா கணவர் நடராஜன் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நிலையில் அவரது படத்தை வைத்து அதிமுக ஆதரவு ஊடகமான நியூஸ் ஜெ-வில் நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பார்க்க உண்மையான நியூஸ் கார்டு போலவே உள்ளதால், நியூஸ் ஜெ உண்மையில் இப்படி ஒரு நியூஸ் கார்டை வெளியிட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

முதலில் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடராஜன் என்று மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளாரா என்று அதன் இணையதளத்தில் பார்த்தோம். ஆனால் அப்படி யாரும் இல்லை. தற்போது கலையரசன் என்பவர் அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த நியூஸ் கார்டில் உள்ள தகவல் தவறானது என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த நியூஸ் கார்டை நியூஸ் ஜெ வெளியிட்டதா என்று அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. மேலும், சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டு உண்மையானது இல்லை என்று “FAKE” முத்திரையுடன் அவர்கள் வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

முடிவு:

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் PRO நடராஜனுக்கு தொடர்பு என்று சசிகலாவின் கணவர் நடராஜன் படத்துடன் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:சசிகலாவின் கணவர் நடராஜன் புகைப்படத்துடன் பரவும் நியூஸ் ஜெ. நியூஸ் கார்டு உண்மையா?

Written By: Chendur Pandian 

Result: False

Leave a Reply