
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இறைத்தூதர் முகமது நபி குறித்து பேசியதற்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார் என்பது போல சில பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive
பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்கு ரஷ்ய அதிபர் புதின் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை கண்டனம் என்று பதிவிடப்பட்டுள்ளது. பல நியூஸ்கார்டுகளை ஒன்றாகச் சேர்த்துப் பதிவிடப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான நியூஸ் கார்டில், “இறை தூதர் முஹம்மது நபி அவர்களை அவமதிப்பது கருத்து சுதந்திரம் கிடையாது. ரஷ்ய அதிபர் விளாடமிர் புதின். முஹம்மது நபியை இழிவுபடுத்துவது மத சுதந்திரத்தை மீறுவதாகும். கோடிக்கணக்கான இஸ்லாமிய மக்களின் புனித உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் நமக்கு மிக மோசமான எதிர்காலம் இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பதிவை Syed ibrahim.m.s என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜூன் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த நியூஸ் கார்டை மட்டும் தனியாகப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இஸ்லாமியர்கள் இறைத்தூதர் முகமது நபி பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளர்கள் விமர்சித்தது உலகம் முழுக்க இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் தொடங்கி மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் வரையிலும் இந்தியாவுக்கு எதிராகக் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது போல பலரும் பதிவிட்டு வருகின்றனர். ரஷ்ய அதிபர் புதின் உண்மையில் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தாரா என்று ஆய்வு செய்தோம்.
இது தொடர்பாக கூகுளில் தேடிய போது, ரஷ்ய செய்தி நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் 23ம் தேதி வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது. அதில், “இறைத்தூதர் முகமது நபியை விமர்சிப்பது, இழிவுபடுத்துவது கலை, பேச்சு சுதந்திரம் இல்லை என்று புதின் கூறினார்” எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தியில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரை விமர்சிப்பது, அவமதிப்பது மத சுந்தரத்தை மீறுவதாகும், மக்களின் புனித உணர்வுகளை மீறுவதாகும் என்று புதின் கூறினார் என குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: tass.com I Archive 1 I dawn.com I Archive 2
சார்லி ஹெப்டோ என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊடகம் கேலிச் சித்திரம் வெளியிட்டதைத் தொடர்ந்து உலக அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த நிகழ்வை வைத்து புதின் இந்த கருத்தைக் கூறினார் என செய்திகள் கூறின. அதைத் தவிர வேறு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.
இஸ்லாமியர்களின் இறைத்தூதரை அவமதிப்பதற்கு புதின் கண்டனம் தெரிவித்திருந்தது உண்மைதான். ஆனால், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் விமர்சனத்துக்கு பதில் அல்லது கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த கருத்தை தற்போது புதின் கூறவில்லை. 2021ல் வெளியான பழைய செய்தியை, இப்போது இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது போன்று மாற்றிப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதியாகிறது.
முடிவு:
பிரான்ஸ் பத்திரிகை இஸ்லாமியர்களின் இறைத்தூதர் தொடர்பான கேலிசித்திரம் வெளியிட்டது தொடர்பாக புதின் வெளியிட்டிருந்த கண்டனத்தை, தற்போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகழ்வுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:முகமது நபி மீதான விமர்சனம்; பாஜக.,வை கண்டித்தாரா விளாடிமிர் புதின்?
Fact Check By: Chendur PandianResult: Partly False
