தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் மொத்தமும் அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கடனுக்கு வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

யாரோ ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போல உள்ளது. அதில், “தமிழக அரசின் மொத்த வரி வருவாய் – 1,42,800 கோடி. அரசு ஊழியர் சம்பளம் – 71,567 கோடி, அரசு ஊழியர் ஓய்வூதியம் – 39,508 கோடி, கடனுக்கு வட்டி – 46,727 கோடி. மொத்த செலவு – 1,57,802 கோடி. மக்களிடம் வரி வசூல் செய்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே திண்டாடும் தமிழக அரசு…. வரி கொடுத்த மக்களுக்கு என்ன செய்யும்? இந்த லட்சனத்தில் இவர்களை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் பாடம் கற்க வேண்டுமாம். அதற்கு பெயர் திராவிட மாடலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kamatchi Thevar Maharajan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜூன் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாய் ரூ.1,42,800 கோடி என்றும், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கு வட்டி மட்டும் ரூ.1,57,802 தேவைப்படுகிறது என்றும் 15 ஆயிரம் கோடி பற்றாக்குறை இருப்பது போலவும், மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு செய்வதே இல்லை என்பது போலவும் தமிழ்நாடு அரசை நக்கல் அடித்து பதிவை பகிர்ந்து வருகின்றனர். 

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் 1,42,800 கோடி ரூபாயாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே தமிழ்நாடு அரசின் வருவாய் இல்லை. வரி சாராத வருவாய் என்று ஒன்று உள்ளது. மத்திய அரசின் பங்களிப்பு என்று உள்ளது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவிகிதம் என்றும், தமிழ்நாட்டுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது 1.23 சதவிகிதம் என்றும் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இன்னும் வேறு சில வழிகளில் தமிழ்நாடு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

தமிழ்நாடு அரசின் மாநில வரி வருவாய் 1,42,800 கோடி ரூபாய் என்று சம்பளம், ஓய்வூதியம், கடன் என குறிப்பிட்டிருந்த வரைக்கும் சரி… ஆனால், இதை வைத்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட தமிழ்நாடு அரசால் முடியாது, வரி கொடுத்த மக்களுக்கு என்ன செய்துவிட முடியும் என்று கூறியிருப்பதன் மூலம் மொத்த வருவாயே இவ்வளவுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு, மக்களுக்கு தமிழ்நாடு அரசு எதுவும் செய்வது இல்லை என்று கூறப்படும் தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: tnbudget.tn.gov.in I Archive 1 I news18.com I Archive 2

தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை பார்த்தோம். அதில், மாநில அரசின் வரி வருவாய் 1,42,799.93 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாடு அரசின் வரி சாரா வருவாய் ரூ.15,534.24 கோடி என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த இரண்டையும் கூட்டினால் 158,334.17 கோடி வருகிறது. இதில் இருந்து கடனுக்கான வட்டி, ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்தை கழித்தால் கூட 500 கோடி அளவுக்கு பணம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. இதனுடன், மத்திய அரசின் நிதி, மத்திய அரசு வசூலித்த வரியில் பங்கு, கடன் பெறுதல் ஆகியவற்றை சேர்த்தே மாநில அரசின் மொத்த வருவாய் கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான வருவாய் ரூ.2,31,407.28 கோடி என பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் செலவு ரூ.2,84,188.45 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு என்ன செலவு செய்கிறது என்று பார்த்தோம். அப்போது நியூஸ் 18 வெளியிட்டிருந்த செய்தி ஒன்று கிடைத்தது. அதில், ரூபாயில், 32 காசுகள் உதவித்தொகை மற்றும் மானியங்களுக்கும், ஊதியங்களுக்கு 20 காசுகளும், வட்டி செலுத்துவதற்காக 13 காசுகளும், மூலதன செலவினங்களாக 12 காசுகளும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களுக்காக 10 காசுகளும், கடன் திருப்பிச் செலுத்துவதற்காக 7 காசுகளும், செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 4 காசுகளும், கடன் வழங்கலுக்காக இரண்டு காசுகளும் செலவிடப்படுகிறது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த செய்தியில், தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும் வருவாயை ஒரு ரூபாயில், மாநில சொந்த வரி வருவாய் 40 காசுகளாகவும், பொதுக்கடன் வாங்கியதில் 34 காசுகள் வருவாயாக வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய அரசின் நிதியில் இருந்து 11 காசுகள் கிடைப்பதாகவும், மத்திய வரியின் பங்கில் 9 காசுகளும், மாநிலத்தின் வரியில்லா வருவாய் அடிப்படையில் 4 காசுகளும், கடன் வசூல் மூலமாக இரண்டு காசுகளும் கிடைக்கிறது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: prsindia.org I Archive

prsindia.org இணையதளம் வெளியிட்டிருந்த 2022-23ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கை தொடர்பான தகவல் அலசலில், எந்தத் துறைக்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துறை வாரியாக பட்டியலிடப்பட்டிருந்தது. அதிலேயே சம்பளம், ஓய்வூதியம், கடன் எவ்வளவு என்றும் பட்டியல் வெளியிட்டிருந்தனர். 2019-20ம் ஆண்டில் இருந்து 2022-23ம் ஆண்டு வரையிலான நிதி நிலை அறிக்கை வரவு – செலவு ஒப்பீடும் இருந்தது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு தன்னுடைய வருவாய் கொண்டு அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக, ஓய்வூதியம் கூட வழங்க முடியாத நிலையில் உள்ளது. மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளையும் செய்ய முடியாத சூழலில் உள்ளது என்று தவறான தகவலை பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று தெளிவாகிறது.

முடிவு:

தமிழ்நாடு அரசின் வரி வருவாயைக் கொண்டு ஊதியம், ஓய்வூதியம் கூட வழங்க முடியாத சூழலில், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்துவிட முடியும் என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context

Leave a Reply