FACT CHECK: பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் மீது முட்டை வீச்சு என பரவும் பழைய வீடியோ!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

பிரான்ஸ் அதிபர் மீது முட்டை வீசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எனவே, அது பற்றிய ஆய்வை மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

தற்போது பிரான்ஸ் அதிபராக இருக்கும் இம்மானுவல் மேக்ரான் தலையில் முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோ பகிரப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரான்ஸ் அதிபரின் மீது முட்டை வீச்சு” என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை Pettai Mustafa என்பவர் 2020 அக்டோபர் 30 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்சில் முகமது நபியின் கேலி சித்திரத்தை மாணவர்களிடம் காட்டிய ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டார். “இப்படி கேலி சித்திரம் வெளியிடுவது தவறு இல்லை, பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடு. பிரான்சில் நிலவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் தடுத்து நிறுத்தப்படும்” என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரான் அறிவித்தார். 

பிரான்ஸ் அதிபரின் இந்த அறிவிப்புக்கு இஸ்லாமியர்கள், இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பிரான்சுக்கு எதிராக போராடி வருகின்றனர். முகமது நபி பற்றிய கேலி சித்திரம் வெளியிடுவது தவறு என்று கூறியவர்கள் இம்மானுவல் மேக்ரானின் கேலி சித்திரத்தை வெளியிட்டும், அவரது புகைப்படத்தை சாலைகள், நடை பாதைகளில் ஒட்டியும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தலையில் முட்டையடி வாங்கிய பிரான்ஸ் அதிபர் என்று  வீடியோ பகிரப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு தற்போது மதச் சுதந்திரத்துக்கான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது நடந்தது போன்று இந்த வீடியோ ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

முட்டை அடி வாங்கியது மேக்ரான் தான் என்றாலும் அது எப்போது நடந்தது என்பது கேள்விக்குறியாகும். தற்போது பிரான்சில் நடந்து வரும் பிரச்னைக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2017ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது தெரிந்தது. அப்போது அவர் பிரான்ஸ் அதிபரும் கிடையாது. அதிபர் பதவிக்கான வேட்பாளர் மட்டுமே. 2017 மே 14ம் தேதிதான் பிரான்ஸ் அதிபராக பதவியேற்றார்.

YouTube Link

2017ல் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் போது இம்மானுவல் மேக்ரான் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்று தகவல் கிடைத்தது. மேலும், இம்மானுவல் மேக்ரான் மீது முட்டை வீசி தாக்குவது அது முதல்முறையும் இல்லை. அவர் பொருளாதார அமைச்சராக இருந்த போது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அசல் பதிவைக் காண: express.co.uk I Archive

இதன் மூலம் இந்த வீடியோ மேக்ரான் பிரான்ஸ் அதிபர் ஆவதற்கு முன்பு இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. 

இதற்கும் 2020 அக்டோபரில் நடந்து வரும் பிரான்ஸ் அரசு – இஸ்லாமியர் இடையேயான பிரச்னைக்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீச்சு நடந்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மேக்ரோன் பிரான்ஸ் அதிபராவதற்கு முன்பு அவர் மீது முட்டை வீசப்பட்ட வீடியோவை எடுத்து தற்போது நடந்தது போல சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருவதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் மீது முட்டை வீச்சு என பரவும் பழைய வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False