
டெல்லியில் நரேந்திர மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் பாலம் ஒன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I Archive
பாலம் ஒன்று மேலே உயர்ந்து இறங்கித் தள்ளாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சாலைகள் அமைப்பதில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று முன்பு நாடாளுமன்றத்தில் மோடி பேசியதன் ஆடியோ எடிட் செய்து வைக்கப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லியில், மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜி உதவியுடன் நிறுவப்பட்டுள்ள தள்ளாடும் பாலம்! விரைவில் Breaking News வரும்! காத்திருக்கவும்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் சிலர் இது எங்கு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல், “இதில் பயணித்தால் போய் சேர வேண்டிய இடம் எது என்பதை பாலம் தான் முடிவு செய்யும்😭😭😭😭😭😭 இதுதான் மோடியின் ” SPACE TECHNOLOGY ” கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வரிப்பணம் மொத்தமா நக்கிக்கிட்டு போயிடுச்சு” என்று குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பொதுவாக பீகார் பாலங்கள் பற்றி சமூக ஊடகங்களில் தகவல் பரவும், தற்போது டெல்லியில் பாலம் மிகவும் மோசமாக உள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். டெல்லியில் எந்த இடத்தில் இந்த பாலம் உள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. வீடியோவை பார்க்கும் போது டெல்லி போலவும் தெரியவில்லை. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது என்றும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் அவலம் என்று குறிப்பிட்டும் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டிருந்தனர். மேற்கு வங்க மாநிலம் நதியா மாவட்டத்தில் உள்ள Nabadwip Gaurang Setu பாலம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இதன் அடிப்படையில் சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது பாலம் பழுது என்று நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை வைத்து பல ஊடகங்களிலும் செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இந்த செய்தியைத் தொடர்ந்து பாலம் மராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன. இவை எல்லாம் இந்த பாலம் டெல்லியில் உள்ளது என்ற தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.
இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையா அல்லது மாநில நெடுஞ்சாலையா என்று தேடிய போது, மாநில நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தது. அடுத்ததாக இந்த பாலம் எப்போது கட்டப்பட்டது என்று தேடினோம். 1972ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1983ல் திறக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு தான் பிரதமராக வந்தார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசால் கட்டப்பட்ட பாலம் இது.
உண்மைப் பதிவைக் காண: structurae.net I Archive
பாலம் திறந்து கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் ஆகின்றது. இதன் மூலம் இதற்கும் நரேந்திர மோடி அரசுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. இந்த பாலம் கட்டும் போது மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. திறக்கும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி இருந்தது. இதன் மூலம் மம்தா பானர்ஜி இந்த பாலத்தைக் கட்டினார் என்பதும் தவறானது என்பது தெளிவாகிறது.
முடிவு:
மேற்கு வங்கத்தில் பழுதடைந்த பாலத்தின் வீடியோவை டெல்லியில் நரேந்திர மோடி கட்டிய பாலம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:“மோடியின் ஸ்பேஸ் டெக்னாலஜியால் கட்டப்பட்ட தள்ளாடும் டெல்லி பாலம்” என்று பரவும் வீடியோ – உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
