
லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தான் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமிய ஆட்சியாளர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “1789ம் ஆண்டு எடுக்கப்பட்ட மைசூர் புலி திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் தகவலில், “திப்பு சுல்தான் அவர்களின் உண்மையான உருவப்படம். இலண்டன் பொருட்காட்சியகத்தில் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Muchudar Ansari என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் ஜூலை 6, 2021 அன்று பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஏற்கனவே திப்பு சுல்தானின் அசல் படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையில் திப்பு சுல்தானின் புகைப்படம் இல்லை என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தை எடுத்துவந்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
நம்முடைய முந்தைய ஆய்வுகளிலேயே புகைப்படக் கருவி திப்பு சுல்தான் மறைந்து 27 ஆண்டுகள் கழித்து தான் உலகின் முதல் புகைப்படம் பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானியால் எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தோம். இந்த நிலையில் ஓவியமாக இல்லாமல், புகைப்படமாக பகிரப்பட்டுள்ளதால் இது உண்மையில் திப்பு சுல்தானின் படம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

அசல் பதிவைக் காண: historiamniejznanaizapomniana.wordpress.com I Archive 1 I gettyimages.in I Archive 2
படத்தில் இருக்கும் நபர் யார் என்று ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது தான்சானியாவின் சான்சிபாரி என்ற பகுதியின் சுல்தானாக இருந்த சேயித் ஹாமீத் பின் துவைன் (sultan Seyyid Hamed bin Thuwain in Zanzibar) என்று குறிப்பிட்டு பல செய்திகள், பதிவுகள் நமக்குக் கிடைத்தன.
கெட்டி இமேஜஸ் புகைப்படங்கள் விற்பனை தளத்திலும் இந்த புகைப்படம் இருந்தது. இதன் மூலம் படத்தில் இருப்பது திப்பு சுல்தான் இல்லை என்பது உறுதியானது. இதன் அடிப்படையில் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திப்பு சுல்தானின் ஒரிஜினல் புகைப்படம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திப்பு சுல்தானின் அசல் புகைப்படம் என்று பகிரப்படும் நபரின் படம் தான்சானியாவின் ஒரு பகுதிய ஆண்ட சுல்தான் ஒருவருடைய படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தான் புகைப்படமா இது?
Fact Check By: Chendur PandianResult: False
