
ராமரும், பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர் என்று திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பாபர் மசூதி இறுதி தீர்ப்பு என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் படத்துடன் “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – பா.ரஞ்சித் வருத்தம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நியூஸ் கார்டை அமாவாச – Naga Raja Chozhan MA என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 10ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராஜராஜ சோழன் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். அதைத் தொடர்ந்து பா.ரஞ்சித்தை பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். ராஜராஜ சோழன் தொடர்பாக கூறிய கருத்தை வேறு வேறு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி பதிவுகள் வெளியாகி வருகின்றன. அதையும் உண்மை என்று நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளநிலையில், அது பற்றி பா.ரஞ்சித் கருத்து தெரிவித்தது போன்ற நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி உள்ளது.

சிறிய தலைப்பு அழிக்கப்பட்டுள்ளது, வாட்டர் மார்க் லோகோ இல்லை, படத்தின் கீழே பெயர் இல்லை. ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது. இவை எல்லாம் நியூஸ்7 வெளியிடும் நியூஸ் கார்டு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதை உறுதிபடுத்துகிறது. இருப்பினும் நியூஸ் 7 வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். நவம்பர் 9ம் தேதி 12 மணிக்கு வெளியான நியூஸ்கார்டுகளை ஆய்வு செய்தோம். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளது போன்ற நியூஸ்கார்டு இல்லை.

ஒருவேளை பா.ரஞ்சித் இதுபோன்ற கருத்தை வெளியிட்டு அதை இவர்கள் நியூஸ் 7 கார்டை பயன்படுத்தி பதிவை வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஏதும் சொல்லியுள்ளாரா என்று பார்த்தோம்.
2019 நவம்பர் 9ம் தேதி அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்… தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றால்… “சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???”” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Archived Link |
தீர்ப்பு பற்றிய அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் ரஞ்சித் பதிவு அமைந்துள்ளது. இதனால் ரஞ்சித்தை கிண்டல் செய்யும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையில் இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
வேறு எங்காவது பேசினாரா என்று கூகுளில் தேடினோம். ஆனால், மேற்கண்ட பதிவில் இடம் பெற்றது போன்ற கருத்தை அவர் எங்கும் தெரிவிக்கவில்லை என்று தெரிந்தது. இந்த நியூஸ் கார்டு குறித்து பா.ரஞ்சித்தின் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
நம்முடைய ஆய்வில்,
ரஞ்சித் படத்துடன் வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான கருத்து கிடைத்துள்ளது.
ரஞ்சித்தின் செய்தித் தொடர்பாளர் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்துள்ளார்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்! – பா.ரஞ்சித் வருத்தம்” என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதிசெய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ராமரும் பாபரும் சூழ்ச்சி செய்து என் நிலத்தை பறித்துவிட்டனர்: ரஞ்சித் பெயரில் பரவும் வதந்தி
Fact Check By: Chendur PandianResult: False
