
வங்கதேசத்தில் இந்துக்களின் நிலம், கடைகள் அடித்து உடைக்கப்பட்டு, கால்நடைகள் திருடப்படுவதாக ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியர்கள் கையில் ஆயுதங்களுடன் சென்று, கட்டிடம் ஒன்றை அடித்து உடைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் இந்துக்களின் நிலம் கடைகள் கால்நடைகள அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இந்துக்களின் கோவிலை இஸ்லாமியர்கள் தாக்குவதாக இதே வீடியோவை பலரும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்துக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவதாகப் பகிரப்படும் இந்த வீடியோவில் தாக்கப்படுவது இந்துக்களின் இடம் அல்லது கோவில் என்பதை உறுதி செய்ய எந்த காட்சியும் இல்லை. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
உண்மைப் பதிவைக் காண: x.com I Archive
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடினோம். இந்து கோவில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இவற்றுக்கு இடையே வங்க மொழியில் வெளியான சில பதிவுகளை தேடி எடுத்தோம். அவற்றிலும் கூட இது பற்றி சரியான தகவல் இல்லை. இரு மதத்தினரும் வழிபாட்டுத் தளங்களை இடிக்கின்றனர், இவர்களுக்குள் என்ன வித்தியாசம் என்பது போன்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
தொடர்ந்து தேடிய போது வங்கதேசத்தின் “முர்ஷித்பூரின் ஷெர்பூரில் (Murshidpur in Sherpur) வழிபாட்டுத் தலத்தை மதரசா மாணவர்கள் தாக்கினர்” என்று ஒருவர் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் கூகுளில் ஷெர்பூர் தாக்குதல் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது, ஷெர்பூரில் உள்ள மசூதியை மற்றொரு பிரிவு இஸ்லாமியர்கள் தாக்கியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் செய்திகள் கிடைத்தன.
உண்மைப் பதிவைக் காண: bddigest.com I Archive I dhakatribune.com I Archive
அதில், “கவாஜா பத்ருதுஜா ஹைதர் (Khwaja Badrudduja Haider (Doja Pir)) தலைமையிலான மத நிறுவனமான முர்ஷித்பூர் தர்பார் ஷெரீப்பை (Murshidpur Darbar Sharif) தாக்கி, அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பல வங்கதேச ஊடகங்களிலும் இதே செய்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது. ஷெர்பூரில் இந்த செய்திகளில் கூறியுள்ளது போல் வழிபாட்டுத்தலம் உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அங்கு அப்படி ஒரு வழிபாட்டுத்தலம் இயங்கி வந்தது தெரியவந்தது.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பற்றி யாரும் செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று அறிய தொடர்ந்து தேடினோம். கிடைத்த தகவல் அடிப்படையில் தொடர்ந்து தேடிய போது, Bangla Affairs என்ற வங்கதேச ஊடகத்தின் யூடியூப் வீடியோ கிடைத்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சிகளும் இருந்தது. ஷெர்பூரில் உள்ள புனித தளத்தில் தாக்குதல் மற்றும் கொள்ளை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் வங்கதேசத்தில் இந்துக்களின் சொத்துக்களை, இந்து கோவிலை இஸ்லாமியர்கள் தாக்கி அழித்தனர் என்று பரவும் பதிவுகள் தவறானவை என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
வங்கதேசத்தில் இஸ்லாமின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவை இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பங்களாதேஷில் இந்துக்களின் நிலம், கோவில் அடித்து நொறுக்கப்படுகிறது என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
