
கத்தார் இளவரசி 2017ம் ஆண்டு லண்டனில் ஏழு வாலிபர்களுடன் கைது செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் ஒரு செய்தி மற்றும் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

வெளிநாட்டில் பெண் ஒருவரைக் கைது செய்யும் படம், ஆண்கள் வரிசையாக நிற்கும் படம் உள்பட பல படங்களைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “017 லண்டனில் 7 வாலிபருடன் கைதான அரபு கர்த்தர் நாட்டு
இளவரசி… sheik_salwa.ஒரே நேரத்தில் ஏழு நபருடன் உறவு வைக்க அவர் சொன்ன காரணம்.? என்னை ஒரு ஆண்மகனால் திருப்த்தி படுத்த இயலாது என்பதே. இந்த newsவெளியிட்டது Financial time news என்ற அமெரிக்க பத்திரிக்கை. இனி அரபிகளின் கருப்பு சரித்திரத்தை புரட்டி ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Bala Rudhra Mc என்பவர் இந்துக்கள் விழிப்புணர்வு இயக்கம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஏப்ரல் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கத்தார் இளவரசி லண்டனில் கைது என்று பல ஆண்டுகளாகவே ஒரு வதந்தி அவ்வப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. துபாயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் தலைமை செயலக அதிகாரியின் படத்தை வெளியிட்டு அது கத்தார் இளவரசி என்று குறிப்பிட்டு வதந்தி பரவி வருவதாகக் கூறப்படுவது உண்டு.
இந்த நிலையில், கத்தார் இளவரசி லண்டனில் பாலியல் வழக்கில் சிக்கியதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டதாக என்று தற்போது பலரும் பரப்பி வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பாலியல் வழக்கில் கத்தார் இளவரசி கைது என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன. மேலும், கத்தார் இளவரசி என்று கார்டியன் உள்ளிட்ட முன்னணி சர்வதேச இதழ்களில் வேறு ஒரு பெண்ணின் படத்தை பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது.
தேடல் முடிவுகள் ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பெண்ணின் படத்துடன் சவுதி இளவரசி லண்டனில் கைது என்றும் செய்திகள் வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. கத்தார் நாட்டு அரச குடும்பத்தை சேர்ந்த பெண்களின் படங்களும் கிடைத்தன.
முதலில் இளவரசி கைது செய்யப்பட்ட படம் என்று பகிரப்பட்டுள்ள படத்தை ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த படம் துருக்கியில் பிப்ரவரி 10, 2017ல் நடந்த பல்கலைக்கழக போராட்டத்தின்போது எடுத்தது என்று தெரியவந்தது.

ஆண்கள் வரிசையாக நிற்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல இணையதள ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. அதேபோல் இரண்டாவது படமும் பல ஆண்டுகளாக இணைய, சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. இதன் மூலம் இந்த ஆண்களுக்கும் கத்தார் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது தெரிந்தது.
கத்தார் இளவரசி என்று பகிரப்பட்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, அந்த பெண்ணின் பெயர் அலியா அல் மசூரி என்றும் இவர் மசூரி ஹோல்டிங்ஸ் என்ற துபாய் நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி என்றும் தெரியவந்தது. இதன் மூலம் படத்தில் உள்ளவர்கள் யாரும் கத்தாருடன் தொடர்புடையவர்கள் இல்லை என்பது உறுதியானது.

அடுத்து நிலைத் தகவலில் உள்ளது போல், இளவரசி செக்ஸ் சம்பவத்தில் சிக்கினாரா என்று ஆய்வு செய்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இந்த சம்பவம் 2017ல் நடந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், ஃபர்ஸ்ட் போஸ்ட் என்ற இணைய இதழில் 2016ம் ஆண்டு வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது.
அதில், “ஃபைனான்ஷியல் டைம்ஸின், கத்தார் இளவரசி பாலியல் வழக்கில் சிக்கியதாக வெளியான செய்தி மறுக்கப்பட்ட நிலையில் இணைதளத்தில் இருந்து மறைந்துள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

அந்த செய்தியில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஃபைனான்ஷியல் டைம்ஸ் “கத்தார் இளவரசி ஹோட்டல் ஒன்றில் ஏழு ஆண்களுடன் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்த செய்தியை வெளியிடாமல் இருக்க அந்த நாளிதழுக்கு கத்தார் தூதரகம் லஞ்சம் தர முயன்றதாகவும், ஆனால் அந்த செய்தியை வெளியிட்டதாகவும்” செய்தி வெளியாகி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், மேலும் கத்தார் இளவரசி படம் என்று துபாயைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி படத்தை வைத்து பகிர்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஃபைன்ஷியல் டைம்ஸில் இந்த செய்தி வெளியாகி உள்ளதா என்று நாமும் அதன் இணையதளத்தில் தேடிப்பார்த்தோம். ஆனால், அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. கத்தார் இளவரசி, செக்ஸ் வழக்கு , லண்டன் என்ற கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடியபோது இந்தியாவிலிருந்து வெளியாகும் டி.என்.ஏ ஊடகம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில் கூட கடந்த வாரம் இங்கிலாந்தில் வெளியான ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழில் இந்த செய்தி வெளியானது என்றே குறிப்பிட்டிருந்தனர். அதிலும் கூட துபாய் அதிகாரியின் படத்தையே வைத்திருந்தனர்.

தொடர்ந்து தேடியபோது, கத்தார் இளவரசி பற்றிய வதந்தியை உருவாக்கியவர்களைத் தேட கத்தார் அரச குடும்பம் சைபர் புலனாய்வு நிபுணர்களை நியமித்துள்ளதாகவும், முதலில் இந்த செய்தி மத்திய கிழக்கு, மற்றும் இந்தியாவிலிருந்து கிளம்பியது என்றும், இதை வெளியிட்டவர்கள் யார் என்று தேடி வருவதாகவும் செய்தி கிடைத்தது.

நம்முடைய ஆய்வில்,
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ளவர் கத்தார் இளவரசி இல்லை என்பதும், எந்த ஒரு படமும் கத்தார் இளவரசியோடு தொடர்புடையது இல்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கத்தார் இளவரசி ஏழு இளைஞர்களோடு கைது செய்யப்பட்டதாக 2016ம் ஆண்டு முதல் வதந்தி பரவி வருவதும், கத்தார் இளவரசி என்று துபாய் நாட்டின் நிறுவனம் ஒன்றின் தலைமை செயலாக்க அதிகாரி படத்தை வைத்து வதந்தி பரப்பி வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஃபைனான்ஷியல் டைம்ஸில் கத்தார் இளவரசி பாலியல் தொடர்பான செய்தி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. கத்தார் இளவரசி தொடர்பாக பரவும் செய்தி வதந்தி என்று பல செய்திகள் நமக்கு கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கத்தார் இளவரசி லண்டன் ஹோட்டலில் ஏழு இளைஞர்களுடன் கைது செய்யப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது- புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
