
ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் சிறுவன் ஒருவனுக்கு அன்புமணி ராமதாஸ் மருத்துவம் பார்த்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஸ்டெதாஸ்கோப் கருவியை காதில் பொருத்தாமலேயே சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பய்யன் – எனக்கு இஸ்க்கு இஸ்க்கு என்று கேட்கிறது. டாக்டர் – எனக்கும் இஸ்க்கு இஸ்க்கு என்று தான் கேட்கிறது.
பய்யன் – டாக்டர் அது என் ப்ரெண்ட் எனக்கு கொடுக்கும் சிக்னல், காதுல ஸ்டெதஸ்கோப்ப மாட்டுங்க. குறிப்பு: இந்த நிகழ்விற்கு பிறகு டாக்டர் காதில் சரியாக மாட அந்த படம் தான் real படமாக பரப்பப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே போன்று அன்புமணி ராமதாஸ் காதில் ஸ்டெதாஸ்கோப் அணியாத புகைப்படத்தை நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றின் காட்சியுடன் இணைத்து சிலர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “படிச்சி ரொம்ப நாள் ஆச்சி அதுவும் தொடர்ந்து செய்தால் தானே ஞாபகம் இருக்க…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவுகளை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பாமக தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறுவன் ஒருவனுக்கு ஸ்டெதாஸ்கோப்பை காதில் வைக்காமலேயே சிகிச்சை அளித்தது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஒரு மருத்துவருக்கு ஸ்டெதாஸ்கோப் கூட பயன்படுத்தத் தெரியாமல் இருக்குமா, எடிட் செய்த படத்தை பகிர்ந்திருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றி தேடிய போது, சமீபத்தில் கடலூரில் நடந்த மருத்துவ முகாமில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. நியூஸ் 18 தமிழ்நாடு இந்த மருத்துவ முகாம் வீடியோவை வெளியிட்டிருந்தது. சிறுவன் ஒருவனுக்கு அன்புமணி ராமதாஸ் ஸ்டெதாஸ்கோப் வைத்து மருத்துவம் பார்க்கிறார். காதில் மாட்டாமல் சிறுவனின் நெஞ்சில் ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதனை செய்கிறார். தன்னுடைய தவறை அறிந்து, ஸ்டெதஸ்கோப்பின் மறுமுனையை தன்னுடைய காதில் மாட்டி, மீண்டும் சிறுவனின் நெஞ்சக பகுதியில் பரிசோதிக்கிறார். இது சிறிய அறியாமல் நடந்த தவறுதான். அதற்காக ஸ்டெதஸ்கோப்பை காதில் மாட்டாமலேயே சிறுவனுக்கு அன்புமணி சிகிச்சை அளித்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது.
மருத்துவ நண்பர்களுடன் பேசிய போது, “எல்லா நேரமும் ஸ்டெதாஸ்கோப்பை காதில் மாட்டியிருக்க முடியாது. திடீரென்று நோயாளிகளை பரிசோதிக்கும் போது நம்மை அறியாமல் இப்படி கழுத்தில் உள்ள ஸ்டெதாஸ்கோப்பை காதில் மாட்டாமல் பரிசோதிக்கும் சூழல் ஏற்படும். சில விநாடிகளில் தவற்றை உணர்ந்து சரி செய்துகொள்வது வழக்கம் தான். மருத்துவர்களும் மனிதர்கள் தானே, நம்மை அறியாமல் நடக்கும் சில விஷயங்கள் போலத்தான் இதுவும்” என்றனர்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறுவனுக்கு காதில் ஸ்டெதஸ்கோப்பின் ஒரு முனையை மாட்டாமல், மற்றொரு பகுதியை வைத்து பரிசோதனை செய்த புகைப்படம் உண்மைதான். ஆனால் ஸ்டெதாஸ்கோப் காதில் மாட்டாததை உணர்ந்து, அதை உடனே சரி செய்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அவ்வளவு பெரிய நிகழ்ச்சியின் சிறு தவற்றை ஊடகம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இதைத் தவிர்த்திருந்தால் இது போன்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம்.
முடிவு:
அன்புமணி சிறுவன் ஒருவனை பரிசோதனை செய்தபோது ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்த மறந்த ஒரு சில விநாடி காட்சியை புகைப்படமாக எடுத்து சமூக ஊடகங்களில் தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஸ்டெதாஸ்கோப்பை காதில் பொருத்தாமல் மருத்துவம் பார்த்த அன்புமணி என்று பரவும் புகைப்படம்; – நடந்தது என்ன?
Fact Check By: Chendur PandianResult: Misleading
