
வங்கதேசத்தில் சிறுபான்மையின இந்துக்களின் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கட்டிடத்தை ஏராளமானோர் இடித்து அழிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பங்களாதேஷில் மைனாரிட்டி இந்து கோவில் மீது தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் இந்துக்களின் கோவிலை இஸ்லாமியர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் இந்த வீடியோ பதிவிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்து கோவில் போல அந்த கட்டிடம் இல்லை. இந்து கோவில் என்பதற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருந்தது. எனவே, வேறு ஏதோ ஒரு கட்டிடத்தைத் தாக்கும் வீடியோவை எடுத்து வதந்தி பரப்பியுள்ளார்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இடம் பெற்ற காட்சிகளுடன் கூடிய வேறு ஒரு வீடியோ 2024 ஆகஸ்ட் 29ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. வங்க மொழியிலிருந்த பதிவை மொழி மாற்றம் செய்து பார்த்தோம்.
அதில், “பங்களாதேஷின் சிராஜ்கஞ்ச், காசிபூரில் உள்ள அலி பக்லாவின் நினைவிடத்தை ஜமாஅத்-ஷிபிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கி அழித்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது இஸ்லாமின் சூஃபி பிரிவு ஞானியின் நினைவிடம் என்று தெரியவந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் சூஃபி பெரியவரின் நினைவிடத்தை காண முடியவில்லை. ஆனால், நாம் தேடி எடுத்த வீடியோவில் அந்த கட்டிடத்தின் மையப் பகுதியில் கல்லறை மிகப்பொிய அளவில் இருப்பதையும் அதை மக்கள் இடிப்பதையும் தெளிவாகக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: kalbela.com I Archive
இந்த பதிவில் உள்ள வாக்கியத்தை அப்படியே காப்பி செய்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இது தொடர்பாக வங்க தேச ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில், இஸ்லாமியர்களே இஸ்லாமிய கல்லறையை தாக்கினார்கள் என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் வங்கதேசத்தில் இந்துக்கள் கோவில் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் இஸ்லாமின் ஒரு பிரிவின் புனித இடத்தை மற்றொரு பிரிவினர் தாக்கிய வீடியோவை, இந்து கோவில் தாக்கப்பட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வங்கதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
