திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் சன் நியூஸ் வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “முதலமைச்சர் கேள்வி. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்து விடுமா? அல்லது படிப்பு வேலை வாய்ப்பு கிடைத்து விடுமா? என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருப்பரங்குன்றம் மலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், தாங்கள் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏற்ற வேண்டும் என்று தீவிர வலதுசாரி அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் மக்களின் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் எழுத்துக்கள் வழக்கமாக சன் நியூஸ் வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், மு.க.ஸ்டாலின் அப்படி பேசியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. தீவிர வலதுசாரி ஊடகங்களிலும் கூட இப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.

Archive

ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய இந்த நியூஸ் கார்டை சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இதே போன்று நியூஸ் கார்டை ஏப்ரல் 1, 2026 அன்று வெளியிட்டிருந்தோம்” என்று குறிப்பிட்டு அந்த நியூஸ் கார்டின் எக்ஸ் தள இணைப்பை நமக்கு அனுப்பினார். 

அதில் “மீண்டும் மீண்டும் நான் திருச்சிக்கு வருவது போல் திமுக மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும். பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு” என்று இருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் பசி – பஞ்சம் போய்விடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் பசி பஞ்சம் தீர்ந்துவிடுமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply