
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்று தோற்றம் அளிக்கும் நபர் புல்டோசரின் பக்கெட் பகுதியில் நின்று பிரசாரம் செய்யும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “யோகி புல்டவுசரால் ரவுடிகளின் வீட்டை இடிப்பது தவறு -அதுகது யோகி: சின்ராசு எடுடா அந்த புல்டவுசர, பிரச்சாரத்துக்கு போவோம்..😎
CM Yogi Adityanath” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் ஆக்கிரமிப்புகள் என்று கூறி அடிக்கடி புல்டோசரால் இடிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் புல்டோசரில் இடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், அந்த புல்டோசரில் ஏறி யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்தார் என்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
வீடியோவில் உள்ள நபர் உடல் மெலிந்து காணப்படுகிறார். காவி உடை, மொட்டைத் தலையுடன் இருப்பதாலேயே அவரை யோகி ஆதித்யநாத் என்று தவறாகப் பகிர்ந்திருப்பது போல் உள்ளது. எனவே, இந்த வீடியோவில் இருப்பது யோகி ஆதித்யநாத் தானா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, புல்டோசரில் இருப்பது போலி யோகி ஆதித்யநாத் என்று தெரியவந்தது. எது தொடர்பாக மராத்தி ஊடகங்களில் வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன. அதில், யோகி ஆதித்யநாத் போன்று ஒருவர் மாறு வேடமிட்டு பிரசாரம் செய்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மைப் பதிவைக் காண: ucnnews.live I Archive I pudhari.news I Archive
தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோ 2024 நவம்பரில் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது. மகாராஷ்டிராவின் அகோலாவின் முர்திசாபூரில் பாஜக வேட்பாளர் ஹரிஷ் பிம்பிள் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் போன்று வேடம் அணிந்த ஒருவர் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார். மேலும் அன்றைய தினம் ஹரிஷ் பிம்பிளுக்காக பிரசாரம் செய்ய உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அகோலா வந்திருந்தார். யோவி வந்த நேரத்தில் இப்படி போலியான நபரை வைத்து பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
டூப்ளிகேட் யோகி ஆதித்யநாத் என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை ஏபிபி ஊடகம் 2024 நவம்பர் 6ம் தேதி யூடியூபில் பதிவிட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ளவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லை என்பதை உறுதி செய்தன.
முடிவு:
யோகி ஆதித்யநாத் போன்று வேடம் அணிந்து ஒருவர் பிரசாரம் செய்த வீடியோவை யோகி ஆதித்யநாத் புல்டோசரில் நின்று பிரசாரம் செய்தார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:புல்டோசரில் நின்று பிரசாரம் செய்த யோகி ஆதித்யநாத் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
