
நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகை வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் ஆகியோர் திருமணம் செய்துகொள்வது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தனது மூன்றாவது கணவனை ஐந்தாவது கணவனாக மீண்டும் திருமணம் செய்த நடிகை.. மேடம் சென்ச்சுரி அடிப்பாங்க போலயே..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இரண்டு திருமணங்கள் முறிவுக்குப் பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டை நடிகை வனிதா விஜயகுமார் காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் பரவின… ஆனால் காதல் கடைசியில் முடிவுற்றது. அதன் பிறகு மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்தார்.
தற்போது நடிகை வனிதா விஜயகுமார் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், அதுவும் தன்னுடைய மூன்றாவது கணவரை ஐந்தாவது திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டிலேயே வனிதா – ராபர்ட் திருமணம் தொடர்பாக செய்திகள் வெளியாகின. கடைசியில் அது திரைப்பட ப்ரமோஷன் என்று செய்தி வெளியானது. ஆனால், மீண்டும் அதே வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக வனிதா விஜயகுமாரின் இன்ஸ்டா பக்கத்தை பார்த்தோம். அதில், Mrs & Mr என்ற திரைப்படத்தில் வரும் சுபமுகூர்த்தம் என்ற பாடல் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் உள்ள காட்சியை எடுத்து ஐந்தாவது திருமணம் என்று வதந்தி பரப்பியிருப்பது தெளிவானது.
ராபர்ட் – வனிதா திருமணம் என்று 2024ல் வதந்தி பரவியது. ஆனால் அது திரைப்பட பிரமோஷன் என்று அப்போதே வீடியோ வெளியிட்டிருந்தார் வனிதா விஜயகுமார். ஆனாலும், மீண்டும் மீண்டும் வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டதாக தவறான தகவலை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக சினிமா பி.ஆர்.ஓ மூலம் வனிதா விஜயகுமார் தரப்பைத் தொடர்புகொண்டு கேட்ட போது அது சினிமா காட்சிதான் என்று உறுதி செய்தனர். எதிர் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்… ஆனால், இப்போது பரவும் புகைப்படம் திரைப்பட காட்சி என்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நடிகை வனிதா விஜயகுமார் புதிதாக நடித்து வரும் திரைப்படத்தின் திருமண காட்சியை எடுத்து ஐந்தாவதாக திருமணம் செய்தார் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:வனிதா விஜயகுமார் 5வது திருமணம் என்றும் பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
