இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் தி.மு.க முக்கிய தலைவர்களுள் ஒருவரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமண வரவேற்பு புகைப்படம் மற்றும் விருந்தில் அதிபர் ஶ்ரீசேனவுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தூத்துக்குடி எம்.பி கனிமொழி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, நம் டிவி என்ற ஃபேஸ்புக் பக்கம் செப்டம்பர் 13, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இது போன்ற பதிவை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தூத்துக்குடி எம்.பி சில தினங்களுக்கு முன்பு இலங்கை சென்றார். அங்கு பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை சந்தித்து தமிழக மீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மற்றும் கைப்பற்றி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பது பற்றி பேசியதாக செய்திகள் வெளியாகின.
கலைஞர் செய்திகள் | Archived Link |
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி பங்கேற்றதாக ஃபேஸ்புக்கில் தகவல் வேகமாகப் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில் மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமணம் எப்போது நடந்தது என்று தேடினோம். அதுவும் 2019 செப்டம்பர் 12ம் தேதி நடந்தாக செய்திகள் தெரிவித்தன. அதில், கனிமொழி பங்கேற்றாரா என்று தேடியபோது, எந்த செய்தியிலும் கனிமொழி பங்கேற்றதாகக் குறிப்பிடவில்லை.
Daily Mirror | Archived Link |
கனிமொழியின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தோம். அதில், செப்டம்பர் 13ம் தேதி கனிமொழி ஒரு புகைப்படங்களுடன் கூடிய ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படமும் இருந்தது.
Archived Link |
அந்த ட்வீட்டில், “நேற்று இலங்கை அமைச்சரும், ‘இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்’ கட்சித் தலைவருமான திரு. ரவூப் ஹக்கீம் அவர்களது மகளின் திருமண நிகழ்வில்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்ந்து அது தொடர்பாக கூகுளில் தேடியபோது, அமைச்சர் ரவூப் ஹக்கிம் மகள் திருமண விழாவில் பங்கேற்க வந்த கனிமொழி கருணாநிதி என்று பல செய்திகள் கிடைத்தன. மேலும், இந்த திருமண விழாவில் இலங்கை அதிபர் மைத்திரிபால ஶ்ரீசேனவுடன் பேசினார் என்றும் செய்திகள் கிடைத்தன.
Colombo Gazette | Archived Link |
ஒன் இந்தியா | Archived Link |
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இலங்கை சென்ற கனிமொழி, இலங்கை அமைச்சர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமணம் நடந்துள்ளது. அந்த படத்தை எடுத்து, கனிமொழி வெளியிட்ட ட்வீட் புகைப்படத்துடன் சேர்த்து விஷமத்தனமாக தகவல் பதிவிடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.