காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி 5% ஆனால் பருப்பு விலை ரூ.200: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

காங்கிரஸ் கட்சியில் ஜி.டி.பி 5 சதவிகிதமாக இருந்த போது பருப்பு விலை ரூ.200 ஆக இருந்ததாகவும், மோடி ஆட்சியில் ஜி.டி.பி அதே 5 சதவிகிதமாக இருந்தாலும் பருப்பு விலை ரூ.70-80ல் உள்ளதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

GDP 2.png
Facebook LinkArchived Link

மன்மோகன் சிங் ஆட்சி மற்றும் மோடி ஆட்சியின் ஜி.டி.பி மற்றும் பருப்பு விலையை ஒப்பிட்டு இன்ஃபோ கிராஃபிக்ஸ் கார்டு உருவாக்கப்பட்டு இருந்தது. அதில், “காங்கிரஸின் பொருளாதாரம் ஆச்சரியமாக இருக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சியில் ஜிடிபி 5 சதவிகிதமாக இருந்த போது பருப்பு விலை கிலோ ரூ.200 ஆக இருந்தது. மோடி ஆட்சியில் ஜிடிபி 5 சதவிகிதமாக இருக்கும்போது பருப்பு விலை ரூ.70-80 ஆக உள்ளது. இருந்தும் ஏன் இந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று கூச்சலிடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, நானும் ஓர் இந்தியனே என்ற ஃபேஸ்புக் ஐ.டி நபர் 2019 செப்டம்பர் 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பா.ஜ.க ஆட்சியில் பருப்பு விலை குறைந்துவிட்டதாகத் தொடர்ந்து தகவல் பரப்பப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கூட இது தொடர்பாக மளிகைக் கடை மொத்த விற்பனையாளர்கள் விலைப் பட்டியல் வெளியிட்டது போன்று ஒரு தகவல் சமூக கூடகங்களில் பரவியது. அதை ஆய்வு செய்தபோது அந்த தகவல் தவறானது என்று தெரிந்தது. இது தொடர்பாக நம்முடைய தமிழ் ஃபேக்ட் கிரஸண்டோ வெளியிட்ட கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பருப்பு விலை ரூ.200 ஆக இருந்ததா என்று ஆய்வு மேற்கொண்டோம். இது தொடர்பாக கூகுளில் தேடியபோது, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில், 2014 இறுதியில் அதாவது மோடி பிரதமர் ஆக பதவி ஏற்ற பிறகே பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கு அப்போது நிலவிய உற்பத்தி குறைவு, லாரி ஸ்டிரைக் என்று பல காரணங்கள் கூறப்பட்டன. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

மன்மோகன் சிங் முதல் முறையாக பிரதமர் பதவி ஏற்ற 2004ம் ஆண்டிலிருந்து இப்போது மோடி இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றிருக்கும் 2019ம் ஆண்டு வரை பருப்பு விலை எப்படி உள்ளது என்று ஆய்வு மேற்கொண்டோம். இந்தியன் கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸ் புள்ளிவிவரப்படி, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தை விட இப்போது பருப்பு விலை அதிகமாக இருப்பது தெரிந்தது. இது தொடர்பான புள்ளிவிவரத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

GDP 3.png

தற்போது துவரம் பருப்பு எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்று தேடினோம். ஆன்லைனில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. மொத்த சந்தையில், ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.9200-க்கு விற்பனையாகிறது. சில்லரை விலைக்கு வரும்போது இது இன்னும் அதிகரிக்கவே செய்யும். தினமலர் வெளியிட்ட செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

GDP 3A.png

ஜிடிபி வளர்ச்சி எப்படி இருந்தது என்று ஆய்வு மேற்கொண்டோம். நிடிஆயோக் வெளியிட்ட 2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான ஜி.டி.பி வளர்ச்சி புள்ளிவிவரம் ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில், 2004ம் ஆண்டு முதல் நல்ல வளர்ச்சியைக் கண்டு வந்துள்ளது தெரிந்தது. நடுவில் 2008-09ம் ஆண்டில் வளர்ச்சி குறைந்து பிறகு மீண்டும் 8 சதவிகிதத்துக்கு மேல் சென்றுள்ளது. பிறகு 2011-12ம் ஆண்டுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கடைசியாக, 2012-13ம் ஆண்டில் 4.47 ஆகவும், 2013-14ல் 4.74 ஆகவும் குறைந்தது தெரிந்தது. இது தொடர்பான புள்ளிவிவரத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

GDP 4.png

அதன் பிறகு சற்று உயர்ந்த ஜி.டி.பி வளர்ச்சி தற்போது மீண்டும் 5 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைவான வளர்ச்சி இது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம்முடைய ஆய்வில்,

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஜி.டி.பி குறைவாக இருந்தாலும் பருப்பு விலையும் குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளது.

மோடி பதவி ஏற்ற பிறகே பருப்பு விலை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

விலை ஏற்றத்துக்கு உற்பத்திக் குறைவு, லாரி ஸ்டிரைக் என்று பல காரணங்கள் உள்ளதாக பிபிசி வெளியிட்ட செய்தி கிடைத்துள்ளது. இதனால், விலை உயர்வுக்கு பிரதமர் மோடியைக் குற்றம்சாட்ட முடியாது.

2004ம் ஆண்டு முதல் 2019 வரையில் பருப்பு விலைப் பட்டியல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து மன்மோகன் சிங் ஆட்சியில் பருப்பு விலை அதிகம் என்ற பொய் தகவல் பரப்பப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பருப்பு விலை அதிகம் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி 5% ஆனால் பருப்பு விலை ரூ.200: ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •