நடிகர் தனுஷைப் பற்றி தவறாகப் பேசிய நடிகர் சிவ கார்த்திகேயனை தனுஷ் ரசிகர்கள் தாக்கினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் நடிகர் சிவ கார்த்திகேயனை சிலர் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "தனுஷ் தன்னை வளர்த்து விட வில்லை என கூறிய நடிகர் சிவகார்த்திகேயன் க்கு சரமாறி அடி உதை குடுத்த ரசிகர்களால் பரபரப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏனென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என்று கூறியிருந்தார். இதன் மூலம் மறைமுகமாக நடிகர் தனுஷை அவர் சுட்டிக்காட்டுவதாகச் செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பேச்சால் கொந்தளிப்பான தனுஷின் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனைத் தாக்கினர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ சற்று பழைய வீடியோ போல் தெரிந்ததாலும், சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பதாலும் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோவில் நியூஸ்7 தமிழ் லோகோ உள்ளது. எனவே, யூடியூபில் நியூஸ்7 தமிழ் பக்கத்துக்கு சென்று நடிகர் சிவகார்த்திகேயன், விமான நிலையம், தாக்கப்பட்டார் என்பது போன்ற சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி இந்த வீடியோவை நியூஸ் 7 தமிழ் யூடியூபில் பதிவிட்டிருப்பது தெரிந்தது. அதில், "மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்களால் நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார்" என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் கூகுளில் தொடர்ந்து தேடினோம். அப்போது 2015ம் ஆண்டு இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான வேறு பல செய்திகளும் நமக்குக் கிடைத்தது. ஆனால் இந்த சம்பத்தில் தான் தாக்கப்படவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்ததாகவும் செய்திகள் கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I filmibeat.com I Archive 2

நம்முடைய ஆய்வில் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயனைத் தாக்கியதாக சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ 2015ம் ஆண்டு மதுரையில் எடுக்கப்பட்டது என்பதும், கமல் ரசிகர்கள் தாக்கியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் நடிகர் சிவ கார்த்திகேயனை விமானநிலையத்தில் தாக்கினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2015ல் கமல் ரசிகர்கள் சிவ கார்த்திகேயனை தாக்கிய வீடியோவை 2024ல் நடிகர் தனுஷ் ரசிகர்கள் சிவ கார்த்திகேயனை தாக்கினார்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நடிகர் சிவ கார்த்திகேயனை தாக்கிய தனுஷ் ரசிகர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False