அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அயோத்தி ராமர் சிலை புகைப்படம் மற்றும் உண்டியலில் கட்டுக்கட்டாக பணத்தை போடும் வீடியோவை இணைத்து ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. அதில் தமிழில், "புத்தகோயிலில் திருப்பதி வசூல் மாதிரி பாப்ரி மஸ்ஜிதல் ராமர் கோயில் வசூல்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் திறக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் தினமும் கோடிக்கணக்கில் காணிக்கை வசூல் செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 22, 2024 அன்று திறக்கப்பட்டதற்கு பிறகு முதல்நாள் உண்டியல் வசூல் என்று முன்பு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அது தவறானது என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோவில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் அடிப்படையில் இந்த வீடியோ போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2023 செப்டம்பரில் இருந்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ அயோத்தியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ராமர் கோவில் வசூல் இல்லை என்பது தெளிவானது.

உண்மைப் பதிவைக் காண: instagram.com

2023 செப்டம்பரில் வெளியான அந்த வீடியோக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். சாவரியா சேத் ஜி கோவிலில் பெண்மணி ஒருவர் 10 லட்ச ரூபாய் காணிக்கை செலுத்தினார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து தேடினோம்.

ராஜஸ்தானில் ஊள்ள சன்வாலியா சேத் என்ற கிருஷ்ணன் கோவிலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பலரும் பகிர்ந்திருந்தனர். அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் உண்டியல் வசூல் என்று பரவிய வீடியோவும் உண்மையில் இந்த கோவிலில் எடுக்கப்பட்டதுதான் என்பது தெரியவந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலில் எடுக்கப்பட்டது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக பணத்தை உண்டியலில் செலுத்தினர் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் வசூல் என்று பரவும் வீடியோ ராஜஸ்தானைச் சார்ந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தி ராமர் கோவிலில் நடக்கும் வசூல் என்றும் பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False