“கலவரத்தை தூண்டிய உளவாளிகளைக் கைது செய்த ஈரான்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

ஈரானுக்குள் உளவு பார்த்து கலவரத்தைத் தூண்டிவிட்ட உளவாளிகளை ஈரான் குடியரசுப் படை கைது செய்து அழைத்து சென்றது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தலையில் சாக்குப்பை போட்டு மறைத்து சிலரைக் கட்டி அழைத்துச் செல்லும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஈ+ரா+னி+ல் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து வந்து திருட்டு தனமாக உளவு பார்த்து கலவரத்தை செய்த கொடியவர்களை ஈ+ரா+னி+ய குடியரசுப்படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈரானில் தற்போது நிகழ்ந்து வரும் போராட்டங்களைத் தூண்டிவிட்டதாக உளவாளிகள் சிலரை ஈரான் பாதுகாப்புப் படை கைது செய்ததாக புகைப்படம் ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்தி மற்றும் புகைப்படம் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 2016ம் ஆண்டில் இந்த புகைப்படத்தை பல செய்தி ஊடகங்களும் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டு பழைய புகைப்படத்தை எடுத்து தவறாக பகிர்ந்திருப்பது தெரியவந்தது.

உண்மைப் பதிவைக் காண: israelhayom.co.il I Archive

இந்த புகைப்படம் தொடர்பாக அந்த ஊடகங்களில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள் என்று பார்த்தோம். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஈரானின் இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்டு கார்ப்ஸ் (Islamic Revolutionary Guard Corps (IRGC) Navy) அமெரிக்க கடற்படை மாலுமிகளை சிறைபிடித்தனர். அந்த ஆண்டு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த ஈரான் புரட்சியின் 37வது ஆண்டு விழா பேரணியின் போது அமெரிக்க மாலுமிகளை சிறைபிடித்த காட்சியை பாதுகாப்புப் படை வீரர்கள் நடித்துக் காட்டினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: newsroom.ap.org I Archive

இந்த புகைப்படத்தை ஏபி சர்வதேச ஊடக நிறுவனம் வெளியிட்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஏபி இணையதள பக்கத்திலிருந்து இந்த புகைப்படத்தைத் தேடி எடுத்தோம். அதிலும் இந்த புகைப்படம் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஈரானுக்குள் உளவு பார்த்த உளவாளிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

2016ம் ஆண்டில் நடந்த “ஈரான் புரட்சி தின” அணிவகுப்பில் இடம் பெற்ற அமெரிக்க கடற்படை வீரர்களை சிறைபிடித்தது தொடர்பாக ஈரான் பாதுகாப்பு படையினர் நடத்திய நாடகத்தின் புகைப்படத்தை தற்போது ஈரானில் வன்முறையைத் தூண்டிய உளவாளிகள் கைது என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“கலவரத்தை தூண்டிய உளவாளிகளைக் கைது செய்த ஈரான்” என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply