லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?
லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2
ஆற்றில் திடீரென்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லிபீயாவில் அணை ஒன்று தகர்ந்து வரும் பெரு வெள்ளத்தினால் பாலம் ஒன்று இடிந்து விழும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை எபனேசர் பால் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லிபியாவில் பங்காசி என்ற பகுதியில் அணை உடைந்து வெள்ளம் ஏற்பட்டதில் பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். ஊரே வெள்ளத்தில் மூழ்கிய காட்சிகள் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. ஆனால், ஆற்றில் கரை புரண்டோடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள், tineye.com உள்ளிட்ட ரிவர்ஸ் இமேஜ் தேடல் தளங்களில் பதிவேற்றித் தேடினோம். tineye.com தளத்தில் நமக்கு இந்த வீடியோ முதன் முதலில் 2016ம் ஆண்டு பகிரப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
மேலும் ஒரு பதிவில் இந்த வீடியோ சௌதி அரேபியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. yandex.com இணையதளத்தில் தேடிய போது நஜ்ரான் (Najran) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கூகுளில் அந்த பெயர் பற்றி தேடிய போது சௌதி அரேபியாவில் உள்ள ஒரு நகரம் என்று தெரிந்தது.
இதன் அடிப்படையில் 2016, Najran என்பது உள்ளிட்ட சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுள், யூடியூபில் தேடினோம். அப்போது சௌதி அரேபியாவின் நஜ்ரானில் பெரு வெள்ள பாதிப்பு என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை 2016ம் ஆண்டு பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.
அதே நேரத்தில் 2016ம் ஆண்டு ஏப்ரலில் சௌதி அரேபியாவில் கடும் மழை பெய்தது என்றும், நஜ்ரான் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ லிபியாவில் 2023ல் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்பின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்கின்றன. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
லிபியாவில் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ 2016ல் சௌதி அரேபியாவில் எடுக்கப்பட்ட வேறு ஒரு வெள்ளப் பெருக்கின் வீடியோ என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:லிபியாவில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False