சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய காட்சி என்று பரவும் போலி வீடியோ!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

கிறிஸ்தவ குட்டி போதகர் ஒருவர் பேசிய வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது போன்று எடிட் செய்த சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

சின்ன வயது அண்ணாமலை பேசுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பிறந்து ஒன்பதே நாளில் நின்றேன், நடந்தேன் என்று கூறுவது போல் உள்ளது. நிலைத் தகவலில், “சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய வீடியோ.. காணத்தவறாதீர்கள்… கட்டாயம் பகிரவும்.!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Ellorum Nammudan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 8ம் தேதி பதிவிட்டிருந்தார். இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிறந்து ஒன்பதே நாளில் நான் நடந்தேன் என்று கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சிறுவயது போதகர் ஒருவர்  பேசியது சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதை பலரும் கிண்டல் செய்யவே, தான் பேசியது தவறு. ஒன்பது மாதங்களில் நடந்தேன் என்று கூறுவதற்குப் பதிலாக ஒன்பது நாளில் நடந்தேன் என்று தவறாகக் கூறிவிட்டேன் என்று அந்த சிறுவயது போதகர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அந்த சிறுவன் பேசிய வீடியோவை டீப் ஃபேக் (Deepfake) முறையில் எடிட் செய்து, அண்ணாமலை முகத்தை வைத்து, அண்ணாமலை பேசியது போன்று பலரும் சமூக ஊடகங்களில் நையாண்டிப் பதிவை வெளியிட்டு வருகின்றனர். இது போலியானது என்று தெரிந்தும் தெரியாமலும் பலரும் இதை லைக், ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் உண்மை வீடியோவை தேடினோம். வீடியோவில் ஜெபம் டிவி என்று லோகோ தெரியவே, அந்த யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களை பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை கண்டறிய முடியவில்லை. ஜோயல் இம்மானுவேல் என்ற அந்த சிறுவனின் யூடியூப் பக்கத்தில் அந்த வீடியோவை காணவில்லை. அனைவரும் நகையாடவே அதை அகற்றியிருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், மன்னிப்பு கேட்கும் வீடியோ மட்டும் உள்ளது. அதில் 9 நாட்களில் நின்றேன், நடந்தேன் என்று தவறாகப் பேசிவிட்டேன் என்று அவர் கூறுகிறார்.

உண்மை வீடியோவை வேறு யாரும் வெளியிட்டுள்ளார்களா என்று தேடினோம். பலரும் யூடியூப், ஃபேஸ்புக்கில் அந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். அவற்றைப் பார்க்கும் போது, அண்ணாமலை முகத்தை மார்பிங் செய்து வைத்து போலியான வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. தொடர்ந்து தேடிய போது பாலிமர் டிவி சிறுவனின் பேச்வை வைத்து செய்தியே வெளியிட்டிருந்தது. 

வீடியோவில் கிறிஸ்தவ போதனை நடப்பதை தெளிவாக அறிய முடிகிறது. அண்ணாமலை சிறுவயதில் கிறிஸ்தவராக இருந்தவர் இல்லை. தொடர்ந்து இந்து மத தர்மங்களைப் பற்றி உயர்வாக பேசிவருபவர் அவர். அவர் கிறிஸ்தவ பிரசாரம் செய்திருந்தால் அது எப்போதோ வெளியாகியிருக்கும். பிறந்து ஒன்பதே நாளில் நடந்தேன் என்று சிறுவன் ஒருவர் பேசியதை வைத்து அண்ணாமலையை நையாண்டி செய்யும் வகையில் இந்த வீடியோவை உருவாக்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கிறிஸ்தவ மத போதனை செய்யும் சிறுவனின் முகத்தை டீப் ஃபேக் எடிட் செய்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முகத்தை வைத்து தவறான வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த  ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிறுவயதில் அண்ணாமலை பேசிய அதிசய காட்சி என்று பரவும் போலி வீடியோ!

Written By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply