“கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த சதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

Communal தவறாக வழிநடத்துபவை I Misleading தேசிய அளவில் I National

வட இந்தியாவில் இந்துக்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த இஸ்லாமியர்கள் சதி செய்வதாக கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கன்வார் யாத்திரை வாகனத்தின் அடியில் திடீரென்று நுழைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த ஆட்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள். நேற்று சஹாரன்பூரின் தியோபந்தில், கன்வார் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற லாரியின் அடியில் வேண்டுமென்றே மோதி “வாஹித்” என்ற நபர் இறந்தார். காவல்துறையினருக்கு ஒரு வீடியோ கிடைத்தபோது கலவரம் தொடங்கியது. கன்வார் யாத்ராவை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஒரு சிறுவனின் கேமராவில் இந்த வீடியோ பதிவாகியுள்ளது. இந்த நபர் ஓடிவந்து லாரியின் சக்கரங்களுக்கு அடியில் படுத்து சம்பவ இடத்திலேயே இறந்தது இந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

அந்த நபர் யார் *”வாஹித்”*, அவர் ஏன் இதைச் செய்தார்?? *யார் இதைச் செய்யச் சொன்னார்கள்?? இந்த வீடியோ இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்??

அரசாங்கம் இந்த சம்பவத்தின் அடிப்பகுதிக்குச் சென்று, திரைக்குப் பின்னால் இதுபோன்ற விளையாட்டுகளை நடத்துபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கன்வர் யாத்திரையைத் தொடர்ந்து அவதூறு செய்யும் சதியின் ஒரு பகுதி. “இந்துக்களை ‘பயங்கரவாதிகள்’ என்று அறிவிக்க முயற்சிப்பது யார்? இந்தக் கேள்வியை ஆழமாகச் சிந்தித்தால், பதில் தானாகவே கிடைக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வட இந்தியாவில் இந்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் கன்வார் யாத்திரை மேற்கொள்கின்றனர். யாத்திரையாக செல்பவர்களுக்கு உத்தரப்பிரதேச அரசும் காவல் துறையும் பூக்களைத் தூவுவது, உணவு வழங்குவது என்று பல உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி பூக்கள் தூவி, கால் பிடித்துவிடுவது தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சூழலில் கன்வார் யாத்திரைக்கு எதிராக இஸ்லாமியர்கள் சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டி வீடியோ ஒன்றைச் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரின் தியோபந்த் என்ற இடத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஒரே பதிவை பலரும் சமூக ஊடகங்களில் காப்பி பேஸ்ட் செய்கின்றனர். இதனால் நேற்று என்று எந்த தேதியைக் குறிப்பிடுகிறார்கள் என்பது தெரியவில்லை. கன்வார் யாத்திரைக்கு எதிராக சதிச் செயல் நடந்ததாக எந்த செய்தியும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சியைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டில் இந்த செய்தியை தீவிர வலதுசாரி ஊடகங்கள் வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதிலும் கூட சதி நடந்ததாக கூறவில்லை. அந்த செய்தியில், “இளைஞர் ஒருவர் கன்வார் யாத்திரை சென்ற வாகனத்தின் கீழே நுழைந்து தற்கொலை செய்துகொண்டார். 

உண்மைப் பதிவைக் காண: opindia.com I Archive I livehindustan.com I Archive

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர் வீட்டின் முன்பாக ஏராளமானவர்கள் கூடினார்கள். நல்லவேளையாக நடந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று கலவரம் எல்லாம் தொடங்கியிருக்கவில்லை. தீவிர வலதுசாரி ஊடகங்களிலும் கூட கலவரம் நடந்ததாக குறிப்பிடப்படவில்லை.

தொடர்ந்து தேடிய போது உத்தரப்பிரதேச காவல்துறை வெளியிட்ட ஃபேக்ட் செக் பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதிலும், இந்த சம்பவம் 2017ம் நடந்தது. பழைய சம்பவத்தை தற்போது நடந்தது போன்று சமூக ஊடகங்களில் வைரலாக்க வேண்டாம். அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான பதிவை வெளியிட்டவர்கள் உடனடியாக அதை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும், இது போன்ற செய்தி, வீடியோக்களை அதன் உண்மைத் தன்மையைச் சரிபார்க்காமல் பகிர வேண்டாம்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

Archive

இதன் மூலம் 2017ம் ஆண்டு நடந்த தற்கொலை சம்பவத்தின் வீடியோவை எடுத்து, தற்போது 2025ம் ஆண்டில் கன்வார் யாத்திரைக்கு எதிராக இஸ்லாமியர்கள் செயல்படுகிறார்கள் என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2017ம் ஆண்டு கன்வார் யாத்திரை சென்ற வாகனத்திற்குள் விழுந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வீடியோவை எடுத்து சமீபத்தில் வன்முறையைத் தூண்ட சதி நடந்தது என்று கூறி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“கன்வார் யாத்திரையைக் கலங்கப்படுத்த சதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading