2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்!

சமூக ஊடகம் சமூகம் தமிழ்நாடு

புயல் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மிகவும் அசாதாரண சூழலில் பணியாற்றும் ஊழியர்கள் சேவையை ஊடகங்கள் காட்டாமல் மறைத்து விட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

மழை நீர் தேங்கி நிற்கும் இடத்தில் மின்சார ஊழியர்கள் மின் கம்பம் நடும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “இது எல்லாம் Tv ல வராது நல்லது பன்றத யாரும் காட்ட மாட்டார்கள் நண்பா நீங்களாவது தெரியபடுத்துங்க..” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை காசி நாதன் இராஜன் என்பவர் 2020 நவம்பர் 24ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பை சீர் செய்யும் பணியில் தமிழக அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் சேவை போற்றுதலுக்குரியது. அதே நேரத்தில் அவர்களின் சேவையை மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் தமிழக ஊடகங்கள் மறைத்துவருவது போல சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் தண்ணீர் சூழ்ந்த பணியில் மின் கம்பம் நடும் படங்கள் பகிரப்பட்டுள்ளது. ஊடகங்களில் இதைக் காட்ட மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எங்கே, எப்போது நடந்தது என்று கூறவில்லை. நிவர் புயல் 25ம் தேதி இரவு தொடங்கி 26ம் தேதி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இந்த சூழலில் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிவர் புயல் பாதிப்பு என்று நினைத்துக் கிட்டத்தட்ட 7200 பேர் ஷேர் செய்துள்ளனர். நிவர் புயல் கரையைக் கடக்க ஆரம்பித்த நிலையில் படம் வெளியிடப்படவே இது பற்றி சந்தேகம் எழுந்தது.

இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது 2017ம் ஆண்டு கன்னியாகுமரியில் ஏற்பட்ட ஒக்கி புயல் பாதிப்பின் போது எடுக்கப்பட்டது என்று பலரும் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

Archive

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த படங்களை 2017 டிசம்பர் 4ம் தேதி வெளியிட்டிருந்தது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதிப்பை தொடர்ந்து மின்சார இணைப்பை விரைவாக பழைய நிலைக்குக் கொண்டு வர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Archive

இந்த படத்தை என்டிடிவி தமிழ் இணையதளம் கூட கஜா புயல் பாதிப்பின் போது பயன்படுத்தியிருந்தது. எனவே, ஊடகங்கள் மின்சார வாரிய ஊழியர்களின் சேவையை மறைத்தது என்று கூறுவது தவறானதாகும்.

புயல் பாதிப்பு ஏற்படும்போது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தானே புயலின் போது 2900க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் மாவட்டம் வரவழைக்கப்பட்டனர். ஒக்கி புயல் பாதிப்பின் போது 2000ம் பேர் கன்னியாகுமரிக்கு வரவழைக்கப்பட்டனர். 

கஜா புயல் பாதிப்பின் போது 25 ஆயிரம் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே நமக்காக தீவிரமாக, உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர். ஒவ்வொரு வேலையுமே மிக முக்கியமானதுதான். அவர்கள் செய்யும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் மீடியாக்கள் வெளியிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதாக இருக்காது.

அசல் பதிவைக் காண: maalaimalar.com I Archive

நம்முடைய ஆய்வில் இந்த புகைப்படங்கள் 2017 ஒக்கி புயல் பாதிப்பின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மின்சார வாரிய ஊழியர்களின் புகைப்படம் 2017ம் ஆண்டு ஒக்கி புயல் பாதிப்பின் போது எடுக்கப்பட்டது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:2017 ஒக்கி புயல் படங்களை நிவர் புயலுடன் தொடர்புபடுத்தி குழப்பும் நெட்டிசன்கள்!

Fact Check By: Chendur Pandian  

Result: False