மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷம் எழுப்பியதைக் கண்டித்து பள்ளிவாசல் முன்பு இந்துக்கள் கூடி போராட்டம் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பள்ளி வாசல் முன்பு காவிக் கொடியுடன் பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "உஜ்ஜயினி நகரத்தில் சமீபத்திய முகரம் ஊர்வலத்தின்போது முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பினர். அது நடந்த இரண்டாம் நாள் அந்த நகரத்தில் உள்ள இந்துக்கள் அனைவரும் காவிக் கொடியுடன் பள்ளிவாசல் முன்பு கூடி "பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டவர்கள் இங்கு வசிக்க வேண்டாம்; பாகிஸ்தானுக்கே செல்லுங்கள்" என்று கோஷமிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கூடிய இந்து மக்களின் கூட்டத்தைப் பாருங்கள். இனி இவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவார்களா?( சரி பார்க்கவும்)" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவானது 2023 நவம்பர் 4ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சமீபத்தில் உஜ்ஜயினியில் நடந்த முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் கோஷம் எழுப்பியதாகவும் அதற்கு அடுத்த நாளே அங்குத் திரண்டு வந்த இந்துக்கள் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்கள் இங்கு வசிக்க வேண்டாம் என்று கோஷம் எழுப்பியதாகவும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முகரம் கடந்த ஜூலை மாதமே முடிந்துவிட்டது. அப்படி இருக்க நவம்பரில் இந்த பதிவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்தது. எனவே, இந்த வீடியோ உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2018ம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ 2018ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அதில், 2018ம் ஆண்டு கர்நாடக மாநிலம் குல்பர்காவில் நடந்த ராம நவமி ஊர்வலம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மசூதி கர்நாடக மாநிலம் குல்பர்காவில் தான் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள அதன் புகைப்படத்தை கூகுள் மேப்-பில் தேடினோம். கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள மசூதியும் குல்பர்காவில் உள்ள HAZRAT SYED SHAH YUNUS SHARF JAHAN QADRI மசூதியும் ஒன்று என்பது உறுதியானது.

2018ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் வீடியோவை எடுத்து, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் முகரம் ஊர்வலத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பப்பட்டதாகத் தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த ராம நவமி வீடியோவை எடுத்த உஜ்ஜயினியில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியவர்களை எதிர்த்து இந்துக்கள் போராட்டம் நடத்தினர் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உஜ்ஜயினியில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியவர்களைக் கண்டித்த இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False