
பல பேரை காவு வாங்கியே அமைச்சரானவர் அன்புமணி ராமதாஸ் என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை விமர்சித்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அன்புமணி பற்றி தமிழிசை சௌந்தரராஜன் கடுமையாக விமர்சித்து அளித்த பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “பல பேரை காவு வாங்கி அமைச்சரானார் அன்புமணி ராமதாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “”அன்புமணி ராமதாசை சவுக்கால் அடித்த தமிழிசை சவுந்தர்ராஜன்” மரியாதை இல்லாமல் பேசுகிறார் அன்புமணி! பல பேரை காவு வாங்கி அமைச்சர் ஆனவர் அன்புமணி ராமதாஸ்! எத சொல்றாங்க! குடிசை கொளுத்தியத சொல்றாங்களா..??” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் பாஜக, பாமக கூட்டணி வெற்றிபெறவில்லை. தேர்தலுக்குப் பிறகு திமுக பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தமிழிசை பேட்டி கொடுத்தார். மேலும், மாநிலத் தலைமைக்கு எதிரான கருத்துக்களையும் கூறி வந்தார்.
தற்போது கூட்டணிக் கட்சித் தலைவரான அன்புமணி ராமதாசுக்கு எதிராக கருத்து கூறியது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற குறிப்பு இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக்குள் மோதல் என்பது போன்ற தோற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோவில் red pix என்ற யூடியூப் சேனலின் லோகோ தெரியவே, அந்த யூடியூப் பக்கத்தில் தேடிப் பார்த்தோம். அப்போது, 2018 ஜூன் 25ம் தேதி இந்த வீடியோவை அந்த சேனல் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதே வீடியோவை வேறு சில இணைய ஊடகங்களும் கூட 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி வெளியிட்டிருந்தன.
விகடனில் அன்புமணி – தமிழிசை மோதல் தொடர்பாக தமிழிசையிடம் சிறப்புப் பேட்டி ஒன்றை வாங்கி வெளியிட்டிருந்தனர். அதில் இருவருக்குமிடையேயான மோதல் பற்றி விரிவாக கூறியிருந்தனர். இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ 2024ஐ சார்ந்தது இல்லை 2018ம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன.
2018ம் ஆண்டு மோதலுக்குப் பிறகு 2019ல் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது. அந்த கூட்டணியில் பாஜக-வும் இருந்தது. அதன் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலிலும் பாஜக – அதிமுக – பாமக கூட்டணி தொடர்ந்தது. தற்போது 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை பாமக – பாஜக உறவு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போது புதிதாக இரு கட்சித் தொண்டர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் வகையில் பழைய வீடியோவை புதிதுபோல பதிவிட்டது போல தெரிகிறது. இருவருக்குமிடையே மோதல் நிகழ்ந்தது உண்மைதான்… ஆனால் அது 2018ல் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அன்புமணிக்கும் – தமிழிசைக்கும் மோதல் என்று பரவும் தகவல் போதுமான விவரங்களை சேர்க்காமல், தேதியை மறைத்து மோதலை உண்டாக்கும் நோக்கில் பகிரப்பட்டிருப்பது என்பது தெளிவாகிறது.
முடிவு:
பாமக தலைவர் அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த தமிழிசை என்று பரவும் வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:அன்புமணி – தமிழிசை மோதல் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?
Written By: Chendur PandianResult: Misleading
