பாதியில் வெளியேறிய ராகுல் காந்தி; மீண்டும் வைரலாகும் செய்தி

அரசியல் சமூக வலைதளம்

‘’காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி கல்லூரி ஒன்றில் மாணவியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே தனது கேள்வி-பதில் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு வெளியேறினார்,’’ என்ற செய்தியை ஒரு இணையதளம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இந்த செய்தியை, 2000-க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். ஏற்கனவே, ராகுல் காந்தி பற்றி இதுபோன்ற பல போலி செய்திகள் பரவி வருவதால், இந்த செய்தியின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். ஆய்வில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.

வதந்தியின் விவரம்:

இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி கேட்ட மாணவி நிகழ்ச்சியை நிறுத்தி வெளியேறிய ராகுல்

டெல்லி

தமிழகத்தில் ராகுல் காந்தி கிறிஸ்தவ கல்லூரி மாணவிகளை சந்தித்து உரையாடினார் அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அவரை பாராட்டும் விதமாகவும், பாஜகவை விமர்சனம் செய்யும் விதமாகவும் இருந்தன.

குறிப்பாக ராகுலிடம் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் உங்கள் மைத்துனர் ராபர்ட் வாதோரா ஊழல் வழக்கில் விசாரணையில் இருக்காரே என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் ஆட்சிக்கு வந்ததும் மோடியை சிறையில் அடைப்பேன் என்று சொல்லி இருந்தார்.

இதே போன்று ஊடகங்களும் அன்புமணி, பிரேமலதாவிடம் காட்டிய வேகத்தை ராகுலிடம் காட்டவில்லை என்று சமூக செயற்பாட்டாளர் பானுகோம்ஸ் உள்ளிட்ட பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றில் தமிழகத்தில் ஏற்பாடு செய்தது போன்று நிகழ்ச்சியினை நேற்று காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது, குறிப்பாக ஆட்களை தேர்வு செய்து வைத்திருந்தார்களாம்.

வழக்கம்போல் பலரும் பாஜகவினை பற்றி கேள்வி கேட்க அதனை ராகுல் சிறப்பாக எதிர்கொண்டார். ஆனால் 2 – ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படிக்கும் ஹரியானவை சேர்ந்த மேனகா என்ற மாணவி கேட்ட ஒற்றை கேள்வி அந்த நிகழ்ச்சியை ராகுல் முடித்துக்கொண்டு வெளியேற காரணமாக இருந்திருந்தது.

மாணவி கேட்ட கேள்வி ‘ நேற்று ஐ நா சபையில் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் சட்டத்திற்கு சீனா முட்டு கட்டை போட்டது இதற்கு நீங்கள் மோடியை சீனாவிடம் அடிபணிந்து செல்கிறார் என்று கூறினீர்கள். முதலில் ஐ நா நமக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை சீனாவிற்கு கொடுத்ததே உங்கள் தாத்தா நேருதான் தெரியுமா?

அதனை வைத்து தான் இந்தியாவிற்கு எதிராக ஒவ்வொருமுறையும் சீனா விளையாடுகிறது, வல்லபாய் படேலிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மாகாணங்களையும் இந்தியாவுடன் இணைத்துவிட்டார்.

ஆனால் உங்கள் தாத்தாவிடம் கொடுக்கப்பட்ட ஒரே காஷ்மீரை இன்றுவரை பிரச்சனைக்கு உள்ளாகிவிட்டார். இப்படி இருக்க நீங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பீர்கள் இதற்கு உங்கள் பதில் என்னவென்று கேட்டார்.

அவ்வளவுதான் தனது நிகழ்ச்சியை எப்போதும் மவுனமாக சிரிப்பதுபோல் சிரித்து கொண்டு பதில் சொல்லமுடியாமல் வெளியேறிவிட்டார், இந்த தகவல்கள் தற்போது இந்தியா முழுவதும் பரவி வருகின்றன, ஆனால் தமிழக ஊடகங்கள் தலைவர்கள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் தமிழகத்தில் மட்டும் வெளியில் சொல்லவில்லை.

Archive Link

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் நேரம் என்பதால், அரசியல் கட்சிகள் தங்களுக்கு இடையே மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்வது வழக்கம்தான். ஆனால், ராகுல் காந்தி பற்றி இவ்வாறு ஒரே செய்தி திரும்ப திரும்ப பகிரப்படுவதால், அதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உண்மை அறிவோம்:   

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல இடங்களில், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேசும் ராகுல், அவர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதும் வழக்கமாக உள்ளது. டெல்லி, சென்னை, பெங்களூரு, மணிப்பூர் என பல்வேறு இடங்களுக்கும் இவ்வாறு அவர் சென்று வருகிறார். ஆனால், டெல்லி கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற கேள்வி, பதில் சந்திப்பு ஒன்றில் மேனகா என்ற மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ராகுல் காந்தி பயந்து ஓடிவிட்டதாக, அந்த செய்தியில் கூறப்படுவது தவறாகும். தான் செல்லும் நிகழ்ச்சிகள் அனைத்திலுமே, ஆரம்பம் முதல் இறுதி வரை ராகுல் காந்தி, பொறுமையாக, மாணவ, மாணவியரின் கேள்விக்கணைகளை எதிர்கொண்டு, பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேற்கண்ட செய்தியில் கூறப்படுவதைப் போல, டெல்லியில் ஏதேனும் கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினாரா என்பது தொடர்பான வீடியோ, செய்தி ஆதாரங்களை கூகுளில் தேடினோம். அதில், சில விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதியன்று டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் தான் பேசிய வீடியோ தொகுப்பை, ராகுல் காந்தியே, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிகழ்ச்சியின் முடிவு வரை பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு இடத்தில்கூட ராகுல் காந்தியிடம், மேனகா என்ற மாணவி, சர்ச்சையான கேள்வி எதையும் கேட்கவில்லை; ராகுலும் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேறவில்லை.  

வீடியோ ஆதாரம் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணைப்பின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archive Link

இதுதவிர, ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர், அடிக்கடி, அந்த கல்லூரி சென்று, மாணவ, மாணவிகளிடையே உரையாடுவது வழக்கமாகும். ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, மேற்கண்ட செய்தி போலியானது என உறுதி செய்யப்படுகிறது. இருந்தாலும், அந்த செய்தியில் தரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையானதா, எங்கே எடுக்கப்பட்டது என்ற விவரம் அறிய, முடிவு செய்தோம். இதன்படி, Yandex இணையதளத்தில் தேடியபோது, குறிப்பிட்ட புகைப்படம் உண்மையான ஒன்றுதான் என தெரியவந்தது. ஆதார புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மேலும், இந்த புகைப்படம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, மும்பை ஐஎம்எஸ் கல்வி நிறுவன மாணவ, மாணவிகளிடையே ராகுல் காந்தி பேசியபோது எடுக்கப்பட்டதாகும். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே ராகுல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Archive Link

இந்த செய்தி, பிப்ரவரி 17, 2016 அன்று ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. இதுபற்றிய விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுதவிர, மேற்கண்ட செய்தியைப் போலவே, ஏற்கனவே ராகுல் காந்தி ஹரியானாவில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மாணவியின் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் பயந்து ஓடியதாகக் கூறி புகைப்படமும், செய்தியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனை தவறான செய்தி என்று, நாம் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து, அதனை நமது இணையதளத்திலும் செய்தியாக வெளியிட்டுள்ளோம். அந்த செய்தியை படிக்க வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும். இதுபோலவே, தற்போது டெல்லியில் ராகுல் காந்திக்கு நேர்ந்த அவமானம் என்று கூறப்படும் செய்தியும் தவறாகும். இது தேர்தல் நேரம் என்பதால், இதுபோல, இன்னும் நிறைய வதந்திகள், ராகுல் காந்தி பற்றியோ அல்லது பிரதமர் மோடி பற்றியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட வாய்ப்புள்ளதால், வாசகர்கள் மிகக் கவனமாக இருப்பது நலம்.

நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ராகுல் காந்தி பற்றி ஒரே வதந்தி திரும்ப திரும்ப வெவ்வேறு பெயர்களில் பரப்பப்படுகிறது.
2) ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளித்து பேசி வருகிறார். எந்த இடத்துலும் அவர் கோபப்பட்டு பாதியிலேயே நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை.
3) டெல்லி கிறிஸ்தவ கல்லூரியில் பேசிய வீடியோவை ராகுல் காந்தியே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மேற்கண்ட செய்தியில் கூறப்படுவதைப் போல எந்த சம்பவமும் இடம்பெறவில்லை.
4) இந்த வதந்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
5) டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில்தான் ராகுல் காந்தி ஒரு வருடம் படித்துள்ளார். முன்னாள் மாணவர் என்ற முறையில், அவர் அடிக்கடி அங்கு செல்வது வழக்கமாகும்.  

முடிவு
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட செய்தி தவறானது என, உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விசயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  

Avatar

Title:பாதியில் வெளியேறிய ராகுல் காந்தி; மீண்டும் வைரலாகும் செய்தி

Fact Check By: Parthiban S 

Result: False

 • 4
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  4
  Shares