பாதாள சாக்கடையில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பைகளை மக்கள் வீசியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாதாள சாக்கடையில் இருந்து ஏராளமான பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் எடுக்கப்பட்டு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், "பொது ஒழுக்கம் கிடையாது! பொது சிந்தனை கிடையாது! குப்பைகளை ரோட்டில் வீசுவதற்கு வெட்கமே கிடையாது! ஆனால் மழை நீர் வடியவில்லை என்றால் ஆயிரம் புகார்கள், கேலிகள், கிண்டல்கள்..." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது டிசம்பர் 5, 2023 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை, வெள்ளம் ஏற்பட்ட சூழலில் மக்களுக்கு பொது ஒழுக்கம் கிடையாது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் சிலர் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர். சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு மக்கள் இப்படி பாதாள சாக்கடை உள்ளிட்ட தண்ணீர், கழிவுநீர் வெளியேறும் அமைப்புகளில் செய்த தவறுகள் தான் காரணம் என்பது போன்று கருத்தைப் பரப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை... அதே நேரத்தில் வெள்ள பாதிப்பு உள்ள சூழலில், தண்ணீர் வடியவில்லை என்று மக்கள் வேதனையுறும் சூழலில் இந்த புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது. எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது thewire.in என்ற இணைய ஊடகத்தில் இந்த புகைப்படம் 2021ம் ஆண்டு பதிவிடப்பட்டிருப்பது தெரிந்தது. பீகார் மாநிலத்தின் பாட்னாவில் மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளத்தின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. 2019ம் ஆண்டு வெளியான வேறு சில இணைய ஊடகங்கள் செய்திகளிலும் இந்த புகைப்படம் பாட்னாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: dubeat.com I thewire.in

தெருக்கள், பாதாள சாக்கடைகளில் குப்பை போடும் தவறான பழக்கம் எல்லா பகுதிகளிலும் உள்ளது. சென்னையில் அப்படி யாரும் செய்வதே இல்லை என்று கூறிவிட முடியாது. அதே நேரத்தில் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் அதுவும் 2023 டிசம்பர் சென்னை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை மறைத்துப் பதிவிட்டிருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

முடிவு:

பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False