
‘’திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்தக்கூடாது,’’ என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’திமுக அரசு பாவம் செய்துக்கொண்டிருக்கிறது*.
மற்றவர்களையும் பாவஞ்செய்ய தூண்டுகிறது.
இனி திமுகவிற்கு ஒரு கிறிஸ்தவர் கூட வாக்கு செலுத்த கூடாது”
நாலுமாவடியில் மோகன் சி லாசரஸ் அதிரடி பேச்சு,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்வதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட சமூக வலைதள பதிவுகளில் கூறியுள்ளது போன்று, மோகன் சி லாசரஸ் திமுக அரசுக்கு எதிராக ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
முதலில், குறிப்பிட்ட வீடியோவை முழுமையாகப் பார்வையிட்டோம். அதில் எந்த இடத்திலும் திமுக என்ற பெயரை மோகன் சி லாசரஸ் குறிப்பிடவே இல்லை.
இந்த வீடியோவில்,
‘’இதோ ஒரு ஜட்ஜ்மென்ட். அரசு குற்றம் செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசு பாவம் செய்துகொண்டிருக்கிறது. மக்களை பாவம் செய்ய தூண்டுகிறது என்று ஒரு ஜட்ஜ் கூறியிருக்கிறார். இதுதான் உண்மை. சாராய விற்பனை செய்து 47% ஆண்களை குடிகாரர்களாக மாற்றியிருக்கிறது இந்த அரசாங்கம். இது ஒரு பயங்கரமான பாவம். மக்களுக்கு செய்ற துரோகம். அதனால் குடும்பங்கள் பாழாகிறது. கடந்த 4 வருசத்துல தமிழ்நாட்டில் விதவைகள் அதிகமாகி இருக்கிறார்கள், என்று கணக்கெடுப்பு சொல்கிறது. ஏன் என்றால், குடித்து குடித்து ஆண்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், பெண்கள் விதவை ஆகறாங்க. பிள்ளைகள் தகப்பன் அற்றவர்களா ஆகுறாங்க. இது தமிழகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. பாருங்க செய்தித்தாளை. நீதிமன்றம் தெளிவாகச் சொல்கிறது. குற்றம் செய்தவன விட, குற்றம் செய்ய தூண்டுகிறவர்களே குற்றவாளிகள். மதுபானத்தால் இவ்வளவு குற்றம் பெருக காரணமாக இருக்கற அரசாங்கம், குற்றவாளி என்பதாக நீதிபதி தீர்ப்பு சொல்லியிருக்கிறார். ஏன் அரசை பொறுப்பாக்கக்கூடாது என்று நீதிபதி குறிப்பிட்டதாக, இந்த செய்தித்தாளில் விளக்கமாக எழுதியுள்ளனர். பாருங்க மக்களே, நேற்றைக்கு முந்தைய தினம் வந்த Judgement copy இது. யோசித்து பாருங்க. ஒரு ஜட்ஜூக்கு இவ்வளவு வேதனை இருந்தா, இயேசுவ அறிந்த தெய்வப் பிள்ளைகள் நமக்கு எவ்வளவு வேதனை இருக்கும்,’’
இவ்வாறு மோகன் சி லாசரஸ் பேசுகிறார்.
அவரது பேச்சை வைத்தே, இது பழைய வீடியோ என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்தப்படியாக, செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்த செய்தியை மேற்கோள் காட்டித்தான் மோகன் சி லாசரஸ் பேசுகிறார். அவரது கையில் செய்தித்தாள் வைத்துள்ளதை தெளிவாகக் காண முடிகிறது.
இதுபற்றி மோகன் சி லாசரஸ் தரப்பில் கேட்டபோது, ‘’கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றை நாளிதழில் செய்தியாக வெளியிட்டிருந்தனர். அதனை மேற்கோள் காட்டி, பேசியதை தவறாக பரப்புகிறார்கள். அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்றது,’’ என்று தெரிவித்தனர்.
கூடுதல் செய்தி ஆதாரம் இதோ…
Hindu Tamil Link l Thanthi TV Link
எனவே, 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தின்போது வெளியான ஊடகச் செய்தியை மேற்கோள் காட்டி மோகன் சி லாசரஸ் பேசிய வீடியோவை எடுத்து, தற்போதைய திமுக ஆட்சியை கண்டித்து பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள், என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

Title:திமுகவிற்கு வாக்கு செலுத்தக்கூடாது என்று மோகன் சி லாசரஸ் கூறினாரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
