
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், விவசாயி ஒருவரை மோடி அரசின் போலீசார் தாக்கியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சீக்கியர் ஒருவர் உடல் முழுக்க லத்தியால் அடித்த காயம் இருக்கும் புகைப்படத்துடன் பதிவு ஃபேஸ்புக்கில் பிப்ரவரி 16, 2024 அன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “EVM இருக்கும் தைரியத்தில் விவசாயிகள் மீது கொடூர அடக்குமுறையை ஏவுகிறது பாசிச மோடி அரசு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்பட பதிவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பல விதங்களில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தி சுடுவதன் மூலம் போராட்டத்தை கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விவசாயி ஒருவர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டது போன்று ஒரு புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை முன்பே பார்த்த நினைவு இருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
2019ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி வெளியான ஒரு ஃபேஸ்புக் பதிவில் இந்த புகைப்படம் இருந்தது. அதில், “டெல்லி போலீஸ் அடித்ததில் சர்தார்ஜி உடலில் ஏற்பட்ட காயம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம். அப்போது, பல ஊடகங்களிலும் குறிப்பிட்ட அந்த தேதியில் வெளியான செய்திகள் கிடைத்தன.
ஏபிபி ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில், “டெல்லியில் போலீஸ் வாகனத்தின் மீது இந்த சீக்கியரின் வாகனம் மோதியது. இதனால் போலீசாருக்கும், சீக்கிய நபர் மற்றும் அவரது மகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த சீக்கியரை டெல்லி போலீசார் அடித்தனர். இந்த சம்பவம் வைரல் ஆகவே, மூன்று போலீசார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: abplive.com I Archive
இதன் மூலம் தாக்குதலுக்கு ஆளான சீக்கியர் விவசாயி இல்லை, வாகன ஓட்டுநர் என்பதும், இவர் விவசாய போராட்டத்தின் போது தாக்கப்பட்டார் என்பது தவறான தகவல் என்பதும் தெளிவாகிறது. மேலும் இந்த புகைப்படம் 2020-21ம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போதும் வைரலாக பகிரப்பட்டிருப்பது தெரியவந்தது. டெல்லி செங்கோட்டையில் இந்தியத் தேசியக் கொடியை அவமதித்ததால் காவல்துறையால் தாக்கப்பட்ட நபர் என்று இந்த புகைப்படம் அப்போது வைரலாக பகிரப்பட்டது. இது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் அப்போது கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மோடி அரசு நடத்திய தாக்குதல் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019ம் ஆண்டு டெல்லி போலிசார் தாக்கியதில் காயம் அடைந்த சீக்கிய வாகன ஓட்டுநர் ஒருவரின் புகைப்படத்தை 2024ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் மோடி அரசால் தாக்குதலுக்கு ஆளான விவசாயி என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘விவசாயிகளை தாக்கிய மோடி அரசு’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: False
