FACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு செய்தும் இதுவரை எந்த பணியையும் மாநில அரசு துவங்கவில்லை. டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை mediyaan.com மீடியான் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஜூன் 2ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

விஜயபாஸ்கர் வெளியிட்ட ட்வீட் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடன் விஜயபாஸ்கர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு புகைப்படங்களை வைத்து பதிவிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உண்மையில் என்ன சொன்னார் என்பதை அறிய அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, அவர் வெளியிட்ட ட்வீட் கிடைத்தது.

Archive

அதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனை டேக் செய்து அவர் வெளியிட்டிருந்த பதிவில் “செங்கல்பட்டில் மத்திய அரசு ரூ.600 கோடி செலவில் உருவாக்கிய தடுப்பூசி மையத்தை பார்வையிட கடந்த ஜனவரி 8ம் தேதி தங்களுடன் இணைந்து வந்திருந்தேன். இந்த தடுப்பூசி மையம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பாட்டுக்கு வந்து கொரோனா தடுப்பூசி தேவைக்கும் – விநியோகத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.

எந்த இடத்திலும் மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தது, மாநில அரசு செயல்படுத்தாமல் உள்ளது என்று கூறவில்லை.

அசல் பதிவைக் காண: dinamalar.com I Archive

உண்மையில் இந்த தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு தானாக முன்வந்து இந்த ஆலையை செயல்பட வைக்கலாம், அல்லது தமிழக அரசுக்கு குத்தகைக்கு கொடுத்தாலும் கூட பரவாயில்லை என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. 

இந்த தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழக அரசு தடையாக உள்ளது என்று எங்காவது விஜயபாஸ்கர் பேசியுள்ளாரா என்று பார்த்தோம். ஜூன் 3ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த விஜயபாஸ்கர், தடுப்பூசி மையத்தில் உற்பத்தி தொடங்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார் என்றுதான் செய்தி கிடைத்தது. 

விஜயபாஸ்கர் வெளியிட்ட ட்வீட்டை விஷமத்தனமாக மாற்றி, தவறான தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்டிருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்று விஜயபாஸ்கர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False