
கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

கட்டுக்கட்டாக புதிய 2000ம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 1000ம் ரூபாய் நோட்டு கட்டுக்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கள்ள நோட்டு அச்சு அடிப்பதில் முதல் இடத்தில் இருப்பது நம்ம தேச துரோகிகள் பாஜக ஆர். எஸ். எஸ்காரனுங்க வீடியோ ஆதாரம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை மொஹம்மெத் தஜுடீன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூலை 25ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் கள்ள நோட்டு அச்சடிக்கப்பட்டது பற்றிப் பேசப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் அல்லது அந்த அமைப்புக்களோடு தொடர்புடையவர்கள் என்று யாரும் கூறவில்லை. மேலும், அவர்கள் பா.ஜ.க-வினர் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வீடியோவில் காட்டவில்லை. பிறகு எதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில், “வீடியோ ஆதாரம் கிடைத்தது” என்று கூறினார்கள் என்று தெரியாமல் வழிக்க வேண்டியிருந்தது.
மேலும், இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது, கைது செய்யப்பட்டவர்கள் யார், அவர்கள் பெயர் என்ன என எந்த ஒரு விவரத்தையும் அளிக்காமல் கள்ள நோட்டு அச்சடிக்கும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்பதற்கான வீடியோ ஆதாரம் என்று குறிப்பிட்டுள்ளனர். வீடியோவில் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாத நிலையில், இது எங்கே நடந்தது, கைது செய்யப்பட்டவர்கள் யார் என்று ஆய்வு நடத்தினோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு புனேவில் பல லட்சம் மதிப்புடைய கள்ள நோட்டு சிக்கியதாக ஒரு வீடியோ இந்த வீடியோவுடன் ஒத்துப் போனதை காண முடிந்தது.
அதில் புனே போலீசார் மற்றும் ராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில் 55 கோடி மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட ராணுவத்தில் பணியாற்றி வரும் ஷேக் ஆலிம் குலாப் கான் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்று இருந்தது. பல நோட்டுக்களில் குழந்தைகள் வங்கி என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் சில தகவல்கள் கிடைத்தன. அந்த வழக்கு விசாரணைக்குள் நாம் செல்லவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மற்ற நபர்களின் பெயரைப் பார்த்தோம். சுனில் சர்தா, ரித்தேஷ் ரத்னாகர், துஃபைல் அகமது முகமது இஷாக் கான், அப்துல் கானி கான், அப்துல் ரஹ்மான் அப்துல் கானி கான் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது, கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு பேர் இஸ்லாமியர்கள் என்பது தெரிந்தது. அதே நேரத்தில் அவர்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அல்லது வேறு எந்த ஒரு அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடவில்லை.
இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தி பிரிவு உதவியோடு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் பின்னணி பற்றி விசாரித்தோம். புனே போலிசில் பேச தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது ராணுவ உளவுப் பிரிவுடன் தொடர்புடைய விஷயம் என்பதால் அதிகாரிகள் வெளிப்படையாக பேச மறுத்துவிட்டனர். அதே நேரத்தில் இவர்களுக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்று தெரிவித்தனர்.
கள்ள நோட்டு அச்சடித்தது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கைது செய்யப்பட்டவர்கள் எந்த ஒரு அரசியல் அமைப்பையும் சார்ந்தவர்கள் என்று குறிப்பிடவில்லை.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ,க, ஆர்.எஸ்.எஸ் நபர்கள் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர்; வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
