தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்ன பாஜக நிர்வாகியைத் தாக்கிய மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

பாஜக நிர்வாகி ஒருவரை பொது மக்கள் தாக்குவது போன்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இந்தியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. மொழிமாற்றம் செய்து பார்த்தபோது "பாஜக தலைவர்களின் நிலை, இந்த முறை 400 உதைகள் நிச்சயம்" என்பது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "அடிக்குற அடியில!குடலு,குந்தாணி எல்லாம் கழண்டு!கால்வாயில் போய் விழுந்துட்டான்!வேற ஒன்னும் இல்லை சார்!பாஜகவுக்கு, தாமரை சின்னத்தில் வோட்டு போடுங்கன்னு கேட்டேன்!ஊரே சேர்ந்து ஓடஓட விரட்டி அடிக்குறாங்க!போலீஸ் மட்டும் வரலைன்னா!போஸ்ட் மார்ட்டம் பண்ணி இருப்பாங்க!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், வட இந்தியாவில் பாஜக-வுக்கு பயங்கர எதிர்ப்பு உள்ளது போன்று வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் அப்படித்தான்.

இந்த பதிவில் இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில் பாஜக-வின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டதால் அடி விழுந்தது என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 400 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எல்லாம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: anandabazar.com I Archive 1 I indiatoday.in I Archive 2

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது வங்க மொழியில் 2019ம் ஆண்டு வெளியான செய்தி ஒன்றில் இந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது. அந்த செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். 2019 நவம்பர் மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக-வின் வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைத் தாக்கி புதருக்குள் வீசினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவலை அடிப்படையாக வைத்து கூகுளில் தேடினோம். அப்போது பல ஊடகங்களிலும் இந்த வீடியோ மற்றும் செய்தி வெளியிடப்பட்டிருப்பது தெரிந்தது. இந்துஸ்தான டைம்ஸ் வெளியிட்டிருந்த வீடியோவில் ஏஎன்ஐ செய்தி ஊடகத்தின் லோகோ இருந்தது. எனவே, ஏஎன்ஐ எக்ஸ் தள பக்கத்தில் இந்த வீடியோ உள்ளதா என்று தேடிக் கண்டுபிடித்தோம். இந்த வீடியோவை ஏஎன்ஐ 2019 நவம்பர் 25ம் தேதி பதிவேற்றம் செய்திருந்தது. அதில் பாஜக மேற்கு வங்க மாநில துணைத் தலைவரும் கரிம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளருமான ஜெய் பிரகாஷ் மஜூம்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நம்முடைய தேடலில், தாக்கப்பட்ட நபர் சில ஆண்டுகளுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார் என்றும் தெரியவந்தது.

Archive

இதன் மூலம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை. தாமரைக்கு வாக்களியுங்கள் என்று சொன்னதால் பொது மக்கள் தாக்கவும் இல்லை. 2019ல் மேற்கு வங்க இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கிய வீடியோவை இப்போது நடந்தது போன்று தவறாகப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

இது 2019 மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜக - வேட்பாளரை தாக்கிய சம்பவத்தின் வீடியோவை தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறிய நபரை தாக்கிய பொது மக்கள் என்று பரவிய தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தாமரைக்கு ஓட்டு கேட்ட நபருக்கு விழுந்த அடி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False