லண்டன் விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் நம் ஊர் பாணியில் டீக்கடை ஒன்றைத் திறந்துள்ளார் என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அரங்கு ஒன்றுக்குள் கிராமத்து டீக்கடை செட் அப் கடை ஒன்று இருப்பது போன்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை போட்ட நம்ம தமிழனின் துணிவு....." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Divyators என்ற ஃபேஸ்புக் ஐடியை கொண்ட நபர் 2021 ஜனவரி 29 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அரங்குக்குள் டீக்கடை உள்ளது. பார்க்க விமான நிலையம் போல தெரிகிறது. உண்மையில் இது லண்டன் விமான நிலையமா, அங்கு தமிழர் டீக்கடையை திறந்துள்ளாரா என்று ஆய்வு செய்தோம்.

லண்டனில் வித்தியாசமாக இப்படி கடை திறந்திருந்தால் அது சர்வதேச அளவில் பெரிய செய்தியாகி இருக்கும். எனவே, கூகுளில் இது தொடர்பாக செய்தி எதுவும் வந்துள்ளதா என்று தேடினோம். அப்போது அப்படி எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தின் உணவக பகுதி புகைப்படம், வீடியோவை பார்த்தோம். மிக உயரமான கூரையோடு, வித்தியாசமாக இருந்தது. எனவே, இது லண்டனில் அமைக்கப்பட்ட கடையாக இருக்காது என்று தோன்றியது. லண்டனில் உள்ள தெரிந்தவர்களிடம் இது குறித்து கேட்ட போது, இது லண்டன் ஹீத்ரூ விமான நிலையம் இல்லை என்றனர்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது சில சமூக ஊடக பதிவுகள், 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சில செய்திகள் நமக்கு கிடைத்தன. அவற்றைப் பார்த்தோம்.

மலையாள செய்தியை மொழிமாற்றம் செய்து பார்த்ததில் அது கேரளாவின் கொச்சியில் உள்ள லூலூ மாலில் அமைக்கப்பட்ட டீக்கடை என்று இருந்தது. தொடர்ந்து தேடிய போது வீடியோ, செய்தி என பல தகவல் நமக்கு கிடைத்தது. அந்த செய்தியில் "லூலூ மாலில் 10 நாள் டீக்கடை திருவிழா நடந்தது. அதில் அந்தக் கால டீக்கடை காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. இதை டோவினோ தாமஸ் என்ற திரை பிரபலம் திறந்து வைத்தார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: businessonlive.com I Archive 1 I vaartha24x7.blogspot.com I Archive 2

2018ம ஆண்டு இதே தகவல் ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டதும் தெரியவந்தது. ட்வீட் பதிவுக்கு ஒருவர் கமெண்ட் செய்திருந்ததைக் காண முடிந்தது. அதில், "இது உண்மையா? நான் பல முறை லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்துக்கு சென்று வந்துள்ளேன். நான் இதை எப்படி கவனிக்கத் தவறினேன்?" என்று கேட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: twitter.com I Archive

இது கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதால் நம்முடைய மலையாளம் குழுவினரின் உதவியை நாடினோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு படத்தில் டீக்கடை வாசலில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது மலையாள திரைப்படத்தின் போஸ்டர் என்று பெரிய சைஸ் போஸ்டரை நமக்கு அனுப்பினர். மேலும், இது லூலூ மாலில் எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதி செய்தனர்.

இதன் மூலம் கொச்சி லூலூ மாலில் 2016ம் நடந்த உணவு திருவிழா டீக்கடை செட் அப் படத்தை எடுத்து, லண்டனில் டீக்கடை அமைத்த தமிழர் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

லண்டன் விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட டீக்கடை என்று பகிரப்படும் படம் கேரளாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:லண்டன் விமான நிலையத்தில் டீக்கடை திறந்த தமிழன்?- உண்மை அறிவோம்

Fact Check By: Chendur Pandian

Result: False