தருமபுர ஆதீனத்தை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வந்தேன் என்று கூறுவது போன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது போன்று கற்பனையான உரையாடல் எழுதப்பட்டுள்ளது. அதில், (தருமபுரம் ஆதீனம் கேட்பது போல்) "யோவ்...சனாதனப் போராளி நீ எங்கய்யா இந்தப் பக்கம்?

(அதற்கு உதயநிதி பதில் சொல்வது போல்) "அமைச்சரா வரல சாமீ...தனிப்பட்ட முறையில் வந்தேன்..." என்று இருந்தது.

யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் செய்து பதிவிட்டுள்ளனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு, 2023 அக்டோபர் 17ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தான் அமைச்சராக அப்படிக் கூறவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஆய்வு செய்த போது, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் அவ்வாறு கூறவில்லை என்பது தெரிந்தது. உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவைத் தேடி எடுத்தோம். அதில் அமைச்சராக கூறவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதே நேரத்தில் 24வது பத்தியில், "இது போன்ற (அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோருவது) கோரிக்கைகள் மத்திய அமைச்சரவையிலும் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஊடகங்கள் மூலம் அறிந்த வகையில் மத்திய அமைச்சரவையில் உள்ள 78 பேரில் 33 பேர் மீது (42 சதவிகிதம்) கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் நான்கு அமைச்சர்கள் மீது மிக மோசமான கொலை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மதக் கோட்பாட்டின் மீதான தனிப்பட்ட பார்வையைக் காட்டிலும் இவை (மத்திய அமைச்சர்கள் மீதான வழக்குகள்) மிகவும் மோசமானவை" என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: sekarreporter.com I Archive

அதே போல 26வது பத்தியில், "அமைச்சர் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தில் தனிப்பட்ட பார்வை வைத்திருப்பதால் அவர் வகிக்கும் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. அப்படி செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள குடிமகனின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பறித்துவிடும்" என்று கூறியிருந்தார்.

இதை அமைச்சர் என்ற முறையில் கூறவில்லை என்று விஷமத்தனமான மாற்றி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பான ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு சந்தித்த புகைப்படமா இது என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 2020ம் ஆண்டு இந்த புகைப்படத்தை விகடன் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.

அந்த செய்தியில், "'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேற்றும் (நவ.21) கைதுசெய்யப்பட்டார். தனியார் திருமண மண்டபத்தில் சிறைவைக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார். 'இரவு எத்தனை மணி ஆனாலும் தருமபுரம் குருமகா சந்நிதானத்தைச் சந்தித்து ஆசி பெறுவேன்" என்று கூறினார். அதன்படியே இரவு 10 மணிக்கு தருமபுரம் ஆதின மடத்துக்கு வந்து சேர்ந்தார். பின்னர் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை தரிசித்து ஆசி பெற்றார் உதயநிதி ஸ்டாலின்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I swarajyamag.com I Archive 2

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளாரா என்று தேடினோம். நவம்பர் 2, 2020 அன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். அதில், "மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தின் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகளை ஆதீனத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றேன். பிரச்சார பயணம் வெல்ல வாழ்த்திய ஆதீனம் அவர்களுக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 2020ம் ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கூட இல்லை. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது எடுத்த படத்தை அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது போன்று விவரம் அறியாமல் பரப்பி வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

முடிவு:

தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இல்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தருமபுரம் ஆதீனத்தை உதயநிதி சந்தித்தது எப்போது என்று தெரியாமல் பரப்பப்படும் வதந்தி!

Written By: Chendur Pandian

Result: Missing Context