
சமையல் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
தமிழக பா.ஜ.க ஐ.டி விங் நியூஸ் கார்டு போல ஒன்று பகிரப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் கூடிய அந்த நியூஸ் கார்டில், “மாமிசத்தை விட காய்கறிகள் வேக குறைந்த நேரத்தையும் எரிபொருளையும் எடுத்துக் கொள்வதால் சமையல் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவை ஜெயராமன் திமுக என்பவர் 2021 பிப்ரவரி 15 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எந்த ஊடகத்தின் பெயரிலும் இந்த நியூஸ் கார்டு இல்லை. தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறினார் என்று குறிப்பிடவில்லை. ஆனால், அவருடைய புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு இதை வெளியிட்டது போல உள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி வதந்திகள் பரவினால் உடனடியாக அது பற்றி தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் விளக்கம் அளிப்பவர் கே.டி.ராகவன். எனவே, இது அவருடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களை ஆய்வு செய்தோம். நாம் பார்க்கும் போது அவருடைய பக்கத்தில் எதுவும் இல்லை.
எனவே, இது தொடர்பாக கே.டி.ராகவனை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அவர், “இது பொய்யான தகவல். நான் இப்படி கூறவில்லை. இது போலியானது என்று என்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளேன்” என்றார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
அவர் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று நம்மிடம் விளக்கம் அளித்த நிலையில், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவும் நமக்குக் கிடைத்தது. அதில், இந்த நியூஸ் கார்டின் மீது ஃபேக் (FAKE) என்று ஸ்டாம்ப் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம், கேஸ் விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்று கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சமையல் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழக மக்களை சைவ உணவிற்கு மாறும்படி கே.டி.ராகவன் கருத்து கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
