மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் மழை நீர் தேங்கி நிற்கிறது என்று ஒரு வீடியோ மற்றும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் ஒரு முதியவர் தூய தமிழில் பேசுகிறார். கொளத்தூர் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் “முரசொலி பேப்பரின் பொய் செய்தி 

நம்பர் ஒன் முதல்வரின் சொந்த தொகுதி! திராவிடியா மாடல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இந்த வீடியோ, புகைப்படத்தை சமூக ஊடகங்களில் யாரும் பதிவிட்டுள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். Kavin Tamil என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் இந்த புகைப்படத்தையும், கடலூர் தெற்கு மாவட்டம் அதிமுக என்ற ஃபேஸ்புக் பக்கம் உள்ளிட்ட பலரும் இந்த வீடியோவையும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சாதாரண மழைக்கே தண்ணீர் தேங்கும் சென்னை நகரத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று தி.மு.க-வினரும்… இல்லை தேங்கியுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் தண்ணீர் தேங்கியதாக ஒரு வீடியோ, படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது வழக்கமானதுதான். அவர் தொகுதியில் தண்ணீர் தேங்குகிறதா, இல்லையா என்ற ஆய்வுக்குள் ஃபேக்ட் கிரஸண்டோ செல்லவில்லை. இந்த வீடியோ, புகைப்படம் 2022 நவம்பரில் எடுக்கப்பட்டதா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படத்தில் கொளத்தூர் உமாமகேஸ்வரி நகர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, சாணக்யா என்ற யூடியூப் சேனலின் பக்கத்தில் கொளத்தூர், உமாமகேஸ்வரி நகர் என்று டைப் செய்து தேடினோம். அப்போது, 2021 நவம்பர் 12ம் தேதி இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த வீடியோவில் பேசுபவர் தமிழாசிரியர் சையது அப்துல் காதர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோவின் 0.28 மற்றும் 1.09வது நொடியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்பட காட்சியைக் காண முடிந்தது. 

சாணக்யா யூடியூப் சேனலில் 2021 நவம்பரில் வெளியான வீடியோ பதிவை எடுத்துவந்து, 2022ல் சென்னையில் முதல்வர் தொகுதியில் மழை வெள்ள பாதிப்பு என்று தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் மழை நீர் தேங்கிய வீடியோ உண்மையானதுதான், ஆனால், இது 2022ல் எடுக்கப்பட்டது இல்லை, 2021ல் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது என்று 2021ம் ஆண்டு வீடியோவை 2022ல் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் தொகுதியில் தேங்கி நிற்கும் மழைநீர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Missing Context