நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வட இந்தியாவில் பாஜக-வினரை விரட்டியடித்த பொது மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பாஜக-வினரை சிலர் விரட்டி அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "வடக்கிலும் மக்கள் Bjpயை எதிர்க்க தொடங்கிவிட்டார்கள்... பாசிச பாஜகவை வீழ்த்துவோம் INDIAவை காப்போம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் வட இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியினரை பொது மக்கள் விரட்டியடித்து வருகின்றனர் என்று சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோவை முன்பு பார்த்த நினைவு இருந்தது. பழைய வீடியோவை இப்போது நடந்தது போன்று பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். நம்முடைய தேடலில் இந்த வீடியோவை சில செய்தி ஊடகங்கள் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்ததை காண முடிந்தது. அதில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ உத்தரவின் பேரில் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டார்கள், என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் கட்டுரை வெளியானது நினைவுக்கு வந்தது. எனவே, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் என சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடினோம். அப்போது, குஜராத்தில் பாஜக தொண்டர்களை விரட்டியடித்த பொது மக்கள் என்று வதந்தி பரவியபோது உண்மை கண்டறியும் ஆய்வு வெளியிட்டிருந்தது தெரிந்தது.

இதன் மூலம் இந்த வீடியோ 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது. 2022ல் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான மோதல் வீடியோவை எடுத்து, பொது மக்கள் விரட்டியடித்தனர் என்று தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இது இரு கட்சியினருக்கு இடையே நடந்த மோதல் ஆகும். பாஜக-வினரை விரட்டி அடிப்பவர்கள் பொது மக்கள் இல்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கிய வீடியோவை பொது மக்கள் விரட்டி அடித்தனர் என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

2022ல் பாஜக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோவை வட இந்தியாவில் பாஜக-வை விரட்டியடிக்கும் மக்கள் என்று தவறாக பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:வடக்கில் பாஜக-வை விரட்டியடித்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False