நேபாள தலைநகர் காட்மாண்டுவில் கடல் நீர் பொங்கும் கோவிலா?

ஆன்மிகம் சமூக ஊடகம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் சிவன் என்று ஒரு கடலோர சிவ லிங்க வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. நேபாளம் நாட்டை ஒட்டி கடல் எதுவும் இல்லையே, இது என்ன புது கதையாக இருக்கிறது என்று அந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived link

‘’காத்மாண்டு பசுபதிநாத் கோவிலுக்கு செல்வதே கடினம்… அதைவிடக் கடினம் சிவனை படம் எடுப்பது’’ என்று வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அதில், கடல் அலைகள் வந்து சிவலிங்கங்களை நனைத்துச் செல்கின்றன. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த புகைப்படத்தை உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால், 2.4 லட்சம் பேர் இந்த பதிவைப் பகிர்ந்துள்ளனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா, சீனாவால் சூழப்பட்ட நிலப்பரப்பு நேபாளம். இந்நாட்டிற்கு கடல் எல்லையே கிடையாது. இமய மலைத் தொடரில் இந்த நாடு அமைந்துள்ளது. அப்படி இருக்க காத்மாண்டு பசுபதிநாத் கோவில் என்று கடற்கரை சிவ லிங்க வீடியோ வெளியிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

SIVA LINGAM 2.png

பச்சை நிறம் – இந்திய எல்லைப் பகுதி

நீல நிறம் – சீன எல்லைப் பகுதி

இந்த வீடியோ காத்மாண்டு பசுபதிநாதர் கோவில் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், இது என்ன வீடியோ, எங்கே உள்ள கோவில் என்று கண்டறிய முடிவு செய்தோம். வீடியோவில் இருந்து ஒரு ஃபிரேமை மட்டும் எடுத்து yandex.com -ல் பதிவேற்றி தேடினோம். அப்போது இது தொடர்பான பல படங்கள், செய்திகள் கிடைத்தன.

SIVA LINGAM 3.png
SIVA LINGAM 4.png

இந்த சிவலிங்கங்கள் குஜராத் மாநில கடற்கரையில் உள்ள டையூ எனும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இந்த கோவிலுக்கு கங்கேஷ்வர் கோவில் என்று பெயர். பஞ்சபாண்டவர்கள் வன வாச காலத்தில் இங்கு வந்து இந்த லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. கங்கேஷ்வர் கோவிலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.

அதேசமயம், இவர்கள் குறிப்பிடும் காத்மாண்டு பசுபதிநாதர் கோவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆனால், அது கடற்கரை ஓரத்தில் இல்லை. உண்மையில், காத்மாண்டு நகரம் கடல் மட்டத்தில் இருந்து 4600 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

SIVA LINGAM 5.png

இதன் மூலம், டையூவில் உள்ள கங்கேஷ்வர் கோவில் சிவ லிங்கத்தை காத்மாண்டு பசுபதிநாதர் சிவன் என்று தவறாக குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:நேபாள தலைநகர் காட்மாண்டுவில் கடல் நீர் பொங்கும் கோவிலா?

Fact Check By: Praveen Kumar 

Result: False