
‘’இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி தான் இவை
இன்னும் சில நாட்களில் அதிரையும் அடித்து ஓட விடுவார்கள் இன்ஷா அல்லாஹ்,” என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா, என்று தகவல் தேடினோம். அப்போது, இதற்கும் தற்போதைய ஈரான் – இஸ்ரேல் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. அத்துடன், இந்த வீடியோவில் இருப்பவர்களில் யாரும் இஸ்ரேல் அதிபர் மகன் கிடையாது.
முதலில், இஸ்ரேல் அதிபர் யார் என்று பார்க்கலாம். தற்போது, அந்நாட்டின் அதிபர் பதவியில் Isaac Herzog உள்ளார். அடுத்தப்படியாக, பிரதமர் பதவியில் Benjamin Netanyahu உள்ளார். இஸ்ரேலைப் பொறுத்தவரை, அதிகாரம் மிகுந்த பதவி என்றால், அது பிரதமர் பதவிதான்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில், ஈரான் மீது போர் தொடுத்த காரணத்தால் அதிருப்தி அடைந்த இஸ்ரேல் அதிபரின் மகன் என்று குறிப்பிடுவதன் மூலமாக, பெஞ்சமின் நெதன்யாகு மகனை சுட்டுகிறார்கள், என்று தெளிவாகிறது.
அதேசமயம், பெஞ்சமின் நெதன்யாகு, அதிபரா, பிரதமரா என்ற பொது அறிவு இல்லாமலேயே குறிப்பிட்ட வதந்தியை பலரும் சமூக வலைதளங்களில் பரப்புவது, வேதனை அளிப்பதாக உள்ளது.
அடுத்தப்படியாக, இவர்கள் பகிரும் வீடியோ கடந்த 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒன்று. 2023, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் பொதுமக்கள் 1200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தடுக்கத் தவறிய இஸ்ரேல் அரசை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பான காட்சிகள்தான் இவை.
Times of Israel l Al Jazeera l NY Post
எனவே, 2023ம் ஆண்டு எடுக்கப்பட்ட வேறொரு சம்பவம் தொடர்பான வீடியோவை புதியதுபோன்று தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Pankaj IyerResult: False
