FACT CHECK: உலக ஊழல் நாடுகள் பட்டியலில் 76ம் இடத்தில் இருந்த இந்தியா முதலிடம் பிடித்ததா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உலக ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரதமர் மோடியின் புகைப்படம், தினத் தந்தியில் வெளியான “ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்” என்ற செய்தியின் புகைப்படம் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஆகியவற்றை சேர்த்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஊழலில் 76ல இருந்து 1ஆம் இடத்தை பிடித்த புதிய இந்தியாவை உருவாக்க அயராது பாடுபட்டு யோசித்த தருணத்தில்” என்று எழுதப்பட்டிருந்தது. 

இந்த பதிவை மாற்றியோசி Mattriyoci என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 6 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உலக அளவில் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் 76வது இடத்தில் இருந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 76வது இடத்தில் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் உலக நாடுகள் பட்டியலைக் குறிப்பிடுகின்றனர் என்பது தெளிவாகிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஊழல் இல்லாத அல்லது குறைவாக உள்ள நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எந்த நாடு அதிக மதிப்பெண் பெறுகிறதோ அங்கு ஊழல் குறைவாக உள்ளது என்றும், எந்த நாடு குறைவான மதிப்பெண்களைப் பெறுகிறதோ அந்த நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளது என்றும் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

அசல் பதிவைக் காண: transparency.org 

உதாரணத்துக்கு இந்த ஆண்டு 88 புள்ளிகளைப் பெற்ற நியூசிலாந்து, டென்மார்க் ஆகிய இரண்டு நாடுகளும் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டன. 12 புள்ளிகளைப் பெற்ற தெற்கு சூடான், சோமாலியா ஆகிய நாடுகள் 179வது இடத்தை பகிர்ந்து கொண்டன. 180 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு எப்படி இருந்தது என்று நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு 2021ம் ஆண்டு வெளியானது. 2021ம் ஆண்டுக்கான பட்டியல் 2022ம் ஆண்டில் வெளியாகும்.

ஊழல் நாடுகள் பட்டியலில் 76வது இடத்தில் இருந்த இந்தியா முதல் இடத்தை பிடித்தது என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆய்வு படி முதல் இடத்தை பிடித்தது என்றால் ஊழல் இல்லாத நாடு என்று அர்த்தம். ஆனால் ஊழல் அதிகமாகிவிட்டது என்று குற்றம்சாட்டும் வகையில் பதிவிட்டிருந்தனர்.

அசல் பதிவைக் காண: transparency.org I Archive 1 I transparency.org I Archive 2 I dailythanthi.com I Archive 3

இந்தியா ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததா என்று ஆய்வு செய்தோம். முதலில் தினத்தந்தியில் வெளியான செய்தியை தேடி எடுத்தோம். அது 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி வெளியான செய்தியாகும். அதில், “‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் (டி.ஐ.)’ என்ற அமைப்பு, 16 ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் நிலவரம் குறித்து 18 மாதங்கள் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின்போது அந்த அமைப்பு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு, ஊழல் நாடுகளின் பட்டியலை தர வரிசைப்படுத்தி உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குத்தான் முதல் இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் லஞ்ச விகிதாச்சார அளவு 69 சதவீதம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அதாவது உலக ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் வழங்கப்படவில்லை. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள குறிப்பிட்ட 16 நாடுகளில் மட்டும் ஆய்வு செய்து அந்த 16 நாடுகளில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட முடிவுகளையும் தேடி எடுத்தோம். அதில், மிகத் தெளிவாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் மட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

தினத்தந்தி செய்தி கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதில் கடந்த ஆண்டு ஊழல் ஒழிப்பில் இந்தியா 76வது இடத்தில் இருந்தது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 2015ம் ஆண்டில் இருந்து இந்தியா பெற்ற இடங்கள் என்ன என்று டிரான்ஸ்பரன்ஸ் இன்டர்நேஷனல் தளத்தில் ஆய்வு செய்தோம்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்ட 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 40 புள்ளிகள் பெற்று 86வது இடத்தைப் பிடித்தது.

2019ம் ஆண்டு 41 புள்ளிகள் பெற்று 80வது இடத்தைப் பிடித்தது.

2018ம் ஆண்டு 41 புள்ளிகள் பெற்று 78வது இடத்தைப் பிடித்தது.

2017ம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 81வது இடத்தைப் பிடித்தது.

2016ம் ஆண்டு 40 புள்ளிகள் பெற்று 79வது இடத்தைப் பிடித்தது.

2015ம் ஆண்டு 38 புள்ளிகள் பெற்று 76வது இடத்தைப் பிடித்தது. 

நம்முடைய ஆய்வில்,

தினத்தந்தியில் வெளியான செய்தி உலகத் தர வரிசையை குறிப்பிடவில்லை, ஆசிய பசிபிக் பகுதியில் குறிப்பிட்ட 16 நாடுகளில் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

2015ம் ஆண்டுக்கான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் பட்டியலில் இந்தியா 76வது இடம் பிடித்திருப்பது உறுதியாகி உள்ளது.

2021ம் ஆண்டுக்கான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் பட்டியலில் இந்தியா 86வது இடத்தைப் பிடித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா 76வது இடத்தை பிடித்தது உலக அளவிலான தர வரிசையாகும். முதல் இடம் பிடித்தது ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வாகும். இரண்டு வெவ்வேறு ஆய்வுகளை வைத்து ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்தது என்று தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில், ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 76வது இடத்திலிருந்து முதல் இடத்தைப் பிடித்தது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.

முடிவு:

உலக ஊழல் நாடுகள் பட்டியலில் கடந்த ஆண்டு 76வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்தது என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலக ஊழல் நாடுகள் பட்டியலில் 76ம் இடத்தில் இருந்த இந்தியா முதலிடம் பிடித்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading